ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் விளையாட்டாக பதிவிட்ட ட்வீட் ஒன்று அந்த அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை டென்சனாக்கியுள்ளது.
கடந்த 14 வருடங்களாக ஆண்டுதோறும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் துவங்கிவிட்டால் சமூக வலைதளங்களில் ஒவ்வொரு அணியின் ரசிகர்கள் மத்தியிலும் சண்டையும் துவங்கிவிடும். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாகி விடும். ஒவ்வொரு அணியும் தங்களது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் வெளியிடும் சில ட்வீட்கள் வைரலாகும், தேவையில்லாத சில ட்வீட்கள் ரசிகர்கள் மத்தியில் பிரச்சனைய ஏற்படுத்தும்.
மற்ற அனைத்து அணிகளை விடவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம் எப்பொழுதும் ஆக்டிவாகவே இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிடும் வீடியோ, ட்வீட், புகைப்படம் என அனைத்தும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக கடந்த இரண்டு வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களும் பேச பொருளாக திகழ்ந்து வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தை கவனித்து வரும் குழுவினர், நாங்களும் காமெடி செய்கிறோம் என்ற பெயரில் எதையாவது பதிவிட்டு அதற்காக ரசிகர்களிடம் வாங்கி கட்டியும் கொள்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில், சஞ்சு சாம்சனின் புகைப்படம் பதிவிடப்பட்டு, அதில் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனை அறிமுகப்படுத்துகிறோம் என பதிவிடப்பட்டிருந்தது. ராஜஸ்தான் அணியின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் குழுப்பத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சாஹலே இந்த ட்வீட்டை பதிவிட்டதாக தெரிவித்தார். இருந்த போதிலும் இது சரியான முறையல்ல என்றே பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று பதிவிட்டுள்ள ஒரு பதிவு, அந்த அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனையே செம கடுப்பாக்கும் வகையில் அமைந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், தலையில் டர்பன் அணிந்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்ட ராஜஸ்தான் அணி, அதில் நீங்கள் பார்ப்பதற்கு கவர்சியாக உள்ளீர்கள் (You’re looking gorgeous) என பதிவிட்டிருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த ட்வீட் வைரலாவதற்குள் இதனை கவனித்த சஞ்சு சாம்சன் “நட்பு அடிப்படையில் இது போன்று செய்வதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஒரு அணியாக சற்று பொறுப்புடன் இருக்க வேண்டும்” என தனது வெறுப்பை சஞ்சு சாம்சன் ட்விட்டர் பக்கத்தின் மூலமே பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த ட்வீட்டை தொடர்ந்து, ராஜஸ்தான் அணி தான் பதிவிட்ட ட்வீட்டை உடனடியாக டெலிட் செய்தது, ஆனாலும் கோவம் குறையாத சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தையே unfollow செய்துள்ளார்.