ஐபிஎல் தொடரில் சம்பவம் செய்ய காத்திருக்கிறேன்; கெத்தாக பேட்டியளித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்!
ஐபிஎல் தொடரில் முழு திறமையை வெளிப்படுத்த பயிற்சி செய்து வருகிறேன் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சமீபத்திய பேட்டியில் சிறப்பாக பேசியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணிக்கு பல திறமையான இளம் வீரர்கள் கிடைத்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்திய அணியில் தொடர்ந்து சில தொடசர்களில் சஞ்சு சாம்சன் இடம்பெற்று வந்தாலும், ஆடும் 11 வீரர்களில் இவருக்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. கிடைத்த ஒன்றிரண்டு போட்டிகளிலும் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக மீண்டும் வெளியில் அமர்த்தப்பட்டார். அதற்கு அடுத்தடுத்த தொடர்களில் அணியிலும் இடம் கிடைக்கவில்லை.
தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது, ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம் பெற்று தோனியின் இடத்தை நிரப்புவதற்காக காத்திருக்கிறார்.
மீண்டும் ஐபிஎல் தொடரின் வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பெறுவதற்காக சஞ்சு சாம்சன் முழு முயற்சியில் பயிற்சி செய்து வருகிறார்.
அத்தகைய தருணத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த சஞ்சு சாம்சன் கூறுகையில், “டி20 போட்டிகளைப் பொறுத்தவரை கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் ரன்களை குவிக்க வேண்டும். களத்தில் நிலைத்து பின்னர் அடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில் நமக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி ஆடுவதற்கு காத்திருக்கிறார். ஒன்றிரண்டு பந்துகளை கூட இங்கு வீணடிக்க இயலாது.
மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போலவே நானும் ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டால் தனிப்பட்ட நம்பிக்கை உயர்வது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் பெறமுடியும். அவர்களின் ஆதரவு ஒவ்வொரு தருணத்திலும் தேவை. பல முறை எனது இக்கட்டான சூழலில் அவர்கள் ஆதரவு என்னை உயர்த்தியிருக்கிறது.
யுஏஇ மைதானங்கள் பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவதற்காக காத்திருக்கிறேன்.” என்றார்