எளிதில் ஸ்டம்பிங் செய்யக்கூடிய வாய்ப்பை தவறவிட்டு அணியில் அனைவரையும் கடுப்பு ஏற்றியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சப்ராஸ் அகமது.
இங்கிலாந்து சென்றிருக்கும் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு டி20 தொடரில் விளையாடியது. இதில் இரண்டு தொடரிலும் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சப்ராஸ் அகமது டெஸ்ட் தொடர் முழுவதும் வெளியில் அமர்த்தப்பட்டு இருந்தார். அதேபோல் டி20 போட்டிகளில் முதல் 2 போட்டிகளிலும் வெளியில் அமர்ந்து இருந்தார்.
கடைசியாக மூன்றாவது டி20 போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஹபீஸ் 86 ரன்கள் விளாசினார். அடுத்த அதிகபட்சமாக ஹைதர் அலி 54 ரன்கள் விளாசினார். இதனையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வந்தது.
இந்நிலையில் போட்டியின் 11வது ஓவரை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் வாசிம் வீசினார். அப்போது களத்தில் மொயின் அலி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். திடீரென அறையை விட்டு வெளியே வந்த மொயின் பந்தை மிஸ் செய்தார். இதனால் எளிய ஸ்டம்பிங் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் துரதிஸ்டவசமாக சர்பராஸ் அஹமது பந்தை சரியாக பிடிக்காததால் இந்த வாய்ப்பை தவறவிட்டார். மிகவும் எளிய வாய்ப்பை தவற விட்டதால் அவர் மீது அணி வீரர்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருந்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மொயின் அலி 33 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் என மொத்தம் 61 ரன்கள் விளாசி விட்டார்.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலைக்கே சென்று விட்டது. ஆனால் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் பாகிஸ்தான் அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை பெற்றது.
மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.