பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தவர் மிஸ்பா உல் ஹக். இவர் சமீபத்தில் முடிவடைந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரோடு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவி நிரப்பப்படாமல் இருந்தது.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அஹமது உள்ளார். இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.
இதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பாக வரவேற்பு அளித்தார். அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான ஷகாரியார் கான், சர்பிராஸ் அஹமது டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். இதன்மூலம் பாகிஸ்தானின் மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் சர்பிராஸ் அஹமது கேப்டனாக செயல்பட உள்ளார்.
இதுகுறித்து ஷகாரியார் கான் கூறுகையில் ‘‘நானும், தலைமை தேர்வாளரும் ஆன இன்சமாம் உல் ஹக்கும் சேர்ந்து ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். இதுதான் வெளியிடுவதற்கு சரியான நேரம் என்று நினைத்தேன்’’ என்றார்.
சர்பிராஸ் அஹமது பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று சதங்கள், 13 அரைசதங்களுடன் 2089 ரன்கள் குவித்துள்ளார்.