இலங்கை அணிக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அகமெட் கேப்டனாக நீடிக்கிறார், துணை கேப்டனாக பாபர் ஆஸம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தலைமை அணி தேர்வாளருமான மிஸ்பா உல் ஹக் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நியமனங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
எதிர்காலக் கேப்டனாக பாபர் ஆஸம் நியமிக்கப்படும் வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காக அவர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
“ஓய்வறையில் வீரர்களிடையே கலாச்சாரம் மற்றும் மனநிலை மாற்றங்கள் தேவை என்பதை நான் வலியுறுத்துகிறேன் அப்போதுதான் சிறந்த முடிவுகள் கிடைக்கும் சர்பராஸ் அகமெட் இந்த குறிக்கோள்களை எட்ட எனக்கு உதவியாக இருப்பார்.
கடந்த இரண்டு வாரங்களாக சர்பராசுடன் நான் இணைந்து பணியாற்றினேன், அதாவது அவரது கிரிக்கெட்டின் சிலபகுதிகளை மேம்படுத்தி அதன் மூலம் கேப்டனாக அவரது ஒட்டுமொத்த திறனையும் வளர்க்கப் பணியாற்றினோம். இது திறமைக்கான உலகம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு முறையும் களத்தில் சிறந்த திறமையை வெளிப்படுத்துவது இப்போதைய காலக்கட்டங்களில் அவசியம் என்பதை இருவரும் உணர்ந்தோம். ” என்றார் மிஸ்பா உல் ஹக்.
சர்பராஸ் அகமெடும் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் கருத்தை எதிரொலித்து தான் மிஸ்பா கேப்டன்சியின் கீழ்தான் அதிகம் ஆடியுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க இலங்கை ஒருநாள் அணியின் கேப்டன் கருணாரத்னே, 20 ஓவர் அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா உள்பட 10 வீரர்கள் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் அணியின் கேப்டனாக திரிமன்னேவும், 20 ஓவர் அணியின் கேப்டனாக தசுன் ஷனகாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுமுக வீரர்கள் 2 பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் தொடரை புறக்கணித்துள்ளனர் என்று பாகிஸ்தான் மந்திரி பவாத் ஹூசைன் சவுத்ரி தெரிவித்து இருந்த குற்றச்சாட்டை இலங்கை விளையாட்டு மந்திரி பெர்னாண்டோ மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர் என்று பாகிஸ்தான் மந்திரி கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது. 2009-ம் ஆண்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தை கருத்தில் கொண்டே சில வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துள்ளனர். வீரர்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் வலுவான அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறோம். எங்கள் அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.