இங்கிலாந்து அணியிடம் இந்தியா நேற்று தோல்வியடைந்ததால் உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத நிலைமை இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அரையிறுதிக்கான போட்டியில் இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் உள்ளன. இந்த 5 அணிகளிலிருந்து 3 அணிகள் தேர்வு பெறவேண்டும். ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. 14 புள்ளிகளுடன் ஜம்மென்று முதலிடத்தில் உள்ளது.
இந்தியா (11 புள்ளிகள்)
வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடவேண்டும். இந்த இரு ஆட்டங்களிலிருந்து 1 புள்ளி கிடைத்தாலும் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.
நியூஸிலாந்து (11 புள்ளிகள்)
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் அரையிறுதி உறுதி. ஒருவேளை தோற்றுப்போனால்? வங்கதேச அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துவிட்டால் நியூஸிலாந்து உள்ளே சென்றுவிடும். ஒருவேளை வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்திவிட்டாலும் ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அரையிறுதிக்குச் செல்ல முடியும். இதனால் இங்கிலாந்துக்கு எதிராகத் தோற்றாலும் கேவலமாகத் தோற்கக்கூடாது.
இங்கிலாந்து (10 புள்ளிகள்)
நியூஸிலாந்தை வீழ்த்திவிட்டால் அரையிறுதி உறுதி. தோற்றாலும் உள்ளே செல்லமுடியும். எப்படி? இந்தியா வங்கதேசத்தையும் வங்கதேசம் பாகிஸ்தானையும் வீழ்த்தவேண்டும். அப்போது, இங்கிலாந்து அணி பிரச்னையில்லாமல் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.
பாகிஸ்தான் (9 புள்ளிகள்)
பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தவேண்டும். அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து அணி நியூஸிலாந்திடம் தோற்கவேண்டும். இந்த இரண்டுமே நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஒருவேளை, இங்கிலாந்திடம் நியூஸிலாந்து தோற்றுவிட்டால்? பாகிஸ்தான் வங்கதேசத்துக்கு எதிராகப் பெரிய அளவில் வெல்லவேண்டும். சூழ்நிலை சரியாக அமைந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லலாம்.
வங்கதேசம் (7 புள்ளிகள்)
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை வங்கதேசம் முதலில் தோற்கடிக்கவேண்டும். பிறகு நெட்ரன் ரேட்டைப் பற்றி யோசிக்கலாம்.