புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி இனத்திற்கு கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டி கௌரவித்துள்ளார் அறிவியல் ஆராய்ச்சியாளர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பரிமாணத்தை சச்சின் வருகைக்கு முன்பு, சச்சின் வருகைக்குப் பின்பு என இரண்டு பிரிவுகளாக பார்க்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இவரின் சாதனைகள் பல தற்போதுவரை முறியடிக்கப்படாமல் இருக்கின்றன.
கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் கிரிக்கெட் உலகிற்கு தனது பங்களிப்பை சச்சின் டெண்டுல்கர் அளித்திருக்கிறார். இவரின் இந்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பாரத ரத்னா விருது’ மத்திய அரசால் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு மக்களவை உறுப்பினர் பதவியும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வரும் இளம் ஆராய்ச்சியாளர் பிரஜாபதி என்பவர் சிலந்திகள் குறித்து ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். சிலந்திகள் ஆராய்ச்சியில் இவர் முனைவர் பட்டத்தையும் இவர் பெற்றிருக்கிறார்.
பிரஜாபதி சிலந்திகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தபோது, குதித்துக் குதித்துச் செல்லும் புதிய சிலந்தி வகை ஒன்றை தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள். இந்த சிலந்தி இனத்திற்கு “மரென்கோ சச்சின் டெண்டுல்கர்” என பெயர் சூட்டி கவுரவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில், எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். அதிலும் சச்சின் டெண்டுல்கர் மிகவும் பிடித்த வீரர். இவர் வீரர் மட்டுமல்லாது மைதானத்திலும் வெளியிலும் சிறந்த மனிதர். அவரை என்னால் முடிந்த வகையில் நான் கவுரவித்திருக்கிறேன் என்றார்.