தோனியின் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்டியா கொடுத்த ‘ஹேர்-கட்’ பரிசு!

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா,  ஸ்டைலிஷான ஹேர்ஸ்டைல் வைப்பதற்கு பெயர்போனவர். ஆனால் தோனிக்காக, இப்போது அவரே ஹேர் ஸ்டைலிஸ்டாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் தோனிக்கு முடி வெட்டிவிடும் புகைப்படத்தை பகிர்ந்து “தோனியின் பிறந்தநாளுக்கு என்னுடைய சிறப்புப் பரிசு’ என்று பதிவிட்டுள்ளார்.

 

ஜூலை 7-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய தோனிக்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணியின் தலை சிறந்த ஆட்டக்காரராக கருதப்படும் எம்.எஸ்.தோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து உலகக்கோப்பையை பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடந்த, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி, தோனி இந்திய அணிக்காக விளையாடிய 500-ஆவது சர்வதேசப் போட்டியாகும். மேலும் அவர் தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராஃபி ஆகிய தொடர்களையும் வென்றது. இந்த வெற்றிகளுக்கு காரணம், தோனியின் தனித்திறமையும், சரியான திட்டமிடலைக் கொண்ட அவரது தலைமை பண்பும்தான் என்றால் அது மிகையாகாது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் எந்நாளும் கூலாகவே இருக்கும் வீரருமான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். 37-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு ரசிகர்களிடமிருந்தும் சக வீரர்களிடமிருந்து மற்ற செலிபிரிட்டிகளிடமிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன.

அவரது பிறந்தநாளை ஒட்டி ட்விட்டரில் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர், ட்விட்டரில் இந்தியளவில் #HappyBirthdayMSDhoni ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
ட்விட்டரில் பிரபலங்களின் வாழ்த்துகள்..

வீரேந்திர சேவாக்: “உனது வாழ்க்கை இவ்வளவு நீளமாக விரியட்டும். எல்லாவற்றிலும் மகிழ்ச்சி தங்கட்டும். ஸ்ட்ம்ப் ஆக்கும் வேகத்தைவிட அதிக வேகமாக எல்லாவற்றிலும் மகிழ்ச்சி கிட்டட்டும். ஓம் ஃபினிஷாய நமஹ” என ட்விட் செய்ததோடு தோனியின் ஃபுல் ஸ்ட்ரெட்ச் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.

 

முகமது கைஃப்: கிரிக்கெட்  யோகிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வுலகில் நான் பார்த்தவர்களிலேயே மிகவும் ஆழமாக எனை ஈர்த்த தலைவர் நீங்கள்தான். அன்பும் ஆசியும் நிறையட்டும்.

விவிஎஸ் லக்‌ஷ்மண்: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி. தொடர்ந்து ரசிகர்களை ஆராவாரம் செய்து, வீரர்களை ஊக்குவித்து மகிழ்ச்சியைப் பரப்பவும்.

Editor:

This website uses cookies.