இந்திய அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர் ஓவர்களில் அதிக அளவில் தடுமாறுவதாக வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 72, தோனி 56, கே.எல்.ராகுல் 48, ஹர்திக் பாண்ட்யா 46 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோன்ச் 3 விக்கெட் சாய்த்தனர். இந்தப் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஜய்சங்கர் 14, கேதர் ஜாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதனால், அது இந்திய அணிக்கு பின்னடைவை தந்தது 300 ரன்களை எட்ட விடாமல் செய்தது.
இந்நிலையில், இந்திய அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களின் ஓவர்களில் தடுமாறுகிறார்கள் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்திய வீரர்கள் எப்படி விளையாடினார்கள் என்பது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
சேவாக் தன்னுடைய ட்விட்டரில், “ரஷித் கான் முதல் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால், அடுத்த 6 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதேபோல், ஆலென் முதல் 5 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்தார். ஆனால், கடைசி 5 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஸ்பின்னர்களின் ஓவர்களில் இவ்வளவு தடுப்பு ஆட்டமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சேவாக் குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு ஸ்பின்னர்களின் ஓவர்களையும் பின்னால் எதிர்கொண்டது பெரும்பாலும் தோனிதான். அதனால், தோனியின் பேட்டிங்கைதான் சேவாக் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக தெரிகிறது.
எப்படியோ, இறுதி ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார் தோனி. இந்திய அணியின் இன்னிங்சில் சிக்ஸர் அடித்த ஒரே வீரர் தோனிதான். அந்த இரண்டு சிக்ஸர்கள் தோனி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கும். இப்பொழுதும், தோனியை அவரது ரசிகர்கள் கொண்டிக் கொண்டிருந்தாலும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. ஸ்பின்னர்களின் ஓவரை எதிர் கொள்வதில் தோனி அதிக அளவில் தடுமாறுகிறார் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டுதான் வருகிறது. அவரது நிதானமான ஆட்டம் அணியின் வேகத்தை குறைக்கிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.
எப்படியோ, பிரிக்க முடியாதது எது? என்று கேட்டால் அதற்கு சரியான பதிலாக “தோனியும்.. அவர் மீதான விமர்சனமும்தான் அது” என சொல்ல வேண்டி இருக்கும்.