சேவாக் உட்பட பலரும் ரஷித்கானை ஐபிஎல் போட்டிக்கு வேண்டாம் என்று ஒதுக்கினார்கள், ஆனால், இன்று ஐபிஎல் அமைப்பில் உள்ள அனைத்து அணிகளும் ரஷித்கான் பந்துவீச்சை கொண்டாடுகிறார்கள் என்று ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் பெருமிதம் அடைந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் கண்டுபிடிப்பு 19வயது ரஷித்கான். தனக்கே உரிய லெக்ஸ்பின், கூக்ளி முறை பந்துவீச்சால் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டி, வங்கதேசத்துக்கு எதிரான டி20 என அனைத்திலும் முத்திரை பதித்தார்.
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்ற ரஷித்கானின் பந்துவீச்சு அனைத்துத் தரப்பிலும் பேசப்பட்டது. பேட்ஸ்மேன்களை மிரட்டும், குழப்பமடையச் செய்யும் இவரின் பந்துவீச்சைக் கண்டு ஐபிஎல் போட்டியில் அரளாத வீரர்கள் இல்லை என்று கூறலாம்.
மிகக்குறைந்த வயதில் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் குறைந்த போட்டியில் 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ரஷித்கானின் திறமை நாளுக்கு நாள் மெருகேறிவருகிறது.
ஆனால், ஐபிஎல் அணியில் ரஷித்கான் இடம் பெறுவதற்கும், ஒரு தளம் அமைவதற்கும் பல்வேறு அவமானங்களை அவர் அடைந்துள்ளார் என்று ஆப்கானிஸ்தான்அணியின் முன்னாள் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான லால்சந்த் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
ரஷித்கான் குறித்து லால்சந்த் ராஜ்புத் கூறியதாவது:
நான் ஆப்கானிஸ்தான் அணிக்குப் பயிற்சியாளராக இருந்த, 19வயதுக்குட்பட்டோருகான அணியில் ரஷித்கானை அறிமுகம் செய்தேன். இவரின் சுழற்பந்துவீச்சு அப்போதே மிகச்சிறப்பாக இருந்தது. இயற்கையாகவே ரஷித்கானுக்கு சுழற்பந்துவீச்சு சிறப்பாக வந்தது, அவரின் கைவேகமும், வித்தியாசமாகப் பந்துவீச்சு முறையும் மிக அருமையாக அமைந்தது.
ரஷித்கானின் பந்துவீச்சையும், விளையாட்டையும் 6 மாதங்களுக்குப் பின் கவனித்து ஐபிஎல் போட்டியில் சேர்த்தால், நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று முடிவு செய்தேன். நான் கடந்த 2016-ம் ஆண்டு சேவாக்கை அழைத்து உங்கள் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு மிகச்சிறந்த லெக்ஸ்பின்னர் கிடைத்திருக்கிறார் ரஷித்கானுக்கு வாய்ப்புக் கொடுத்து பாருங்கள். மிகச்சிறந்த லெக்ஸ்பின்னர் என்று சேவக்கிடம் கூறினேன். ஆனால், அதற்கு எங்களிடம் அக்ஸர் படேல் இருக்கிறார். இப்போது சுழற்பந்துவீச்சாளர்கள் தேவையில்லை, ஆல்ரவுண்டர்கள்தான் தேவை என்று சேவாக் கூறி ரஷித்கானை நிராகரித்துவிட்டார்.
அப்போது கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீரை அழைத்து அவரிடம் ரஷித்கான் குறித்து தெரிவித்தேன். அந்த நேரத்தில் சுனில் நரேனின் பந்துவீச்சில் சர்ச்சை இருந்ததால், ரஷித்கானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், எங்களிடம் நரேன், குல்தீப் யாதவ் இருக்கிறார்கள், ரஷித்கான் தேவையில்லை என்று கம்பீர் தெரிவித்துவிட்டார்.
அதன்பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணிடம் ரஷித்கான் குறித்து பேசினேன். நீங்கள் ரஷித்கானை நேரடியாகத் தேர்வு செய்யத் தேவையில்லை. அவர் விளையாடும் போட்டிகளில் அவரின் பந்துவீச்சைப் பாருங்கள் என்று அழைத்தேன். அதன்பின் ஐ கோப்பை மற்றும் டி20 போட்டிகளில் ரஷித்கான் விளையாடுவதை விவிஎஸ் லட்சுமண் வந்துபார்த்தார்.
ரஷித்கானின் சுழற்பந்துவீச்சைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போன லட்சுமண் அடுத்த ஐபிஎல் போட்டிக்கு தேர்வு செய்தார். இப்போது ஐபிஎல் போட்டியில் தலைசிறந்த பந்துவீச்சாளராக ரஷித்கான் இருந்து வருகிறார். ஒருநேரத்தில் ஐபிஎல் அணிகளால் ஒதுக்கப்பட்ட ரஷித்கான் இன்று கொண்டாடப்படுகிறார்.
இவ்வாறு லால்சந்த் ராஜ்புத் தெரிவித்தார்.