விராட் கோலியின் பார்ம் பலருக்கும் கவலை அளித்து வரும் நிலையில், அவர் கண்பார்வை மந்தமாகியிருக்கலாம் எனவே கோலி பயிற்சியில் ஈடுபடுவது நல்லது என்று கபில் தேவ் கூற முன்னாள் கிரேட் மொஹீந்தர் அமர்நாத் உத்தியில் பிரச்சினையில்லை விரைவில் மீண்டு வருவார் என்று கூற தற்போது விரேந்திர சேவாக் தன் பங்குக்கு கோலியின் பார்ம் பற்றி கூறியுள்ளார்.
நியூஸிலாந்து தொடரில் அவர் ஒருநாள், டெஸ்ட் இரண்டிலும் ‘தட்டிப் போட்டு’ வீழ்த்தப்பட்டார். 11 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு அரைசதம்தான் எடுத்துள்ளார்.
இந்நிலையில் கண்-கை ஒருங்கிணைப்பு பேட்டிங்குக்கு பெயர் பெற்ற விரேந்திர சேவாக், தி இந்து ஸ்போர்ட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அவுட் ஆஃப் பார்மில் இருக்கும் போது எதுவும் வேலை செய்யாது. விராட் இதனை எதிர்த்து முயற்சிக்காமல் இல்லை, ஆனால் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இப்போதைக்கு இல்லை.
விராட் கோலியிடம் நிச்சயமாக கண்-கை ஒருங்கிணைப்பு பிரச்சினைகளெல்லாம் இல்லை. கண்-கை ஒருங்கிணைப்புக் குறைவதற்கெல்லாம் காலம் பிடிக்கும். ஒரேநாளில் போய் விடாது. எனவே பார்மில் இல்லாததுதான் பிரச்சினை, மேலும் நல்ல பந்துகளில் அவர் ஆட்டமிழந்தார்.
நியூஸிலாந்திலும் இங்கிலாந்து போலவே பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆகின்றன, இங்கெல்லாம் ரன்கள் எடுக்கவில்லையெனில் பிரச்சினை பல மடங்காக அதிகரிக்கும். முன் காலில் வந்து பந்துகளை ஆடாமல் விட முடிவெடுக்கலாம், ஆனாலும் எந்தப் பந்தை ஆடாமல் விடுவது என்பது முக்கியம், இதில் சரியான முடிவை நம்பிக்கையுடன் இருந்தால்தான் எடுக்க முடியும். விராட் கோலிக்கு ஏற்பட்ட அழுத்தமும் அவரது சரிவுக்குக் காரணமாக இருக்கலாம்.
இத்தகைய மோசமான பார்முக்கு சச்சின், லாரா, ஸ்டீவ் ஸ்மித் போன்றோரும் தப்பியதில்லை. எனக்கும் ஏற்பட்டது, ஆனால் எனது இயல்பான அதிரடி ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாமல் அதிலிருந்து வெளியே வந்தேன். கடினமான காலங்களைச் சந்திக்கும் போது, பொறுமையுடன் இருந்து நம் இயல்பூக்கங்களை நம்பி ஆட வேண்டும்.
கோலி மீண்டு எழுவார், இதை நீண்ட நாட்களுக்குச் செல்லவிடாத அளவுக்கு அவர் பெரிய வீரர், என்றார் சேவாக்.வ்