பிசிசிஐ தலைவரான கங்குலி இதைதான் செய்யப்போகிறார்: சேவாக் அதிரடி பேச்சு

பிசிசிஐயின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த புதன்கிழமை பொறுப்பேற்றார். பிசிசிஐ தலைவராக பொறுப்பு ஏற்கும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சவுரவ் கங்குலி பெற்றுள்ளார். இவருக்கு பல வீரர்கள் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கங்குலி பிசிசிஐ தலைவராக பதவியேற்றது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேவாக் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இனிமேல் பிசிசிஐயின் நடவடிக்கை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். ஏனென்றால் தற்போது கங்குலி அதன் தலைவராக பொறுப்பு ஏற்று உள்ளார். கங்குலி 2000ஆம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக இருந்த போது அவர் அப்படி தான் செயல்பட்டார். அத்துடன் எங்களுக்கு வெளிநாட்டு தொடர்களில் எவ்வாறு வெற்றிப் பெறுவது என்பது தொடர்பாக கற்றுக் கொடுத்தார். அதேபோல தற்போதும் அவர் செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன்.

Indian cricket captain Virat Kohli (R) looks on as former captain Sourav Ganguly gestures during a cricket book launch function in Kolkata on April 7, 2018.

அவர் பிசிசிஐ தலைவரான பிறகு தனது முதல் பேட்டியில் உள்ளூர் போட்டிகள் மற்றும் அதன் கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க போவதாக கூறினார். இதை செய்வதற்கு அவர் தான் பொருத்தமான நபர். ஏனென்றால் அவர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த சமயத்தில் உள்ளூர் போட்டிகள் பலவற்றில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு இந்தப் போட்டிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நன்றாக தெரிந்தது. இந்த குறைபாடுகள் குறித்து அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்ற பிறகு, என்னிடம் இந்தப் பிரச்னைகள் குறித்து பேசினார்.

மேலும், அவர் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதில் மிகவும் வல்லவர். அவர் கொடுக்கும் நம்பிக்கை நன்றாக விளையாடாத வீரரையும் மீண்டும் ஃபார்மிற்கு வர உதவும். இவர் கொடுக்கும் நம்பிக்கையினால் அந்த வீரர் இதற்கு முந்தைய போட்டியில் சொதப்பியது நியாபகத்திற்கே வராதது போல இருக்கும். இதனால் அந்த வீரர் அடுத்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார்.

அதேபோல சவுரவ் கங்குலி ஒரு சிறப்பான தலைமை பண்பு உடையவர். இவர் சக வீரர்கள் அனைவரின் கருத்துகளையும் கேட்பார். இவை அனைத்தையும் கேட்டப் பிறகு தனக்கு எது சரி என்று படுகிறதோ அந்த முடிவு எடுப்பார். அவர் சக வீரர்களை நடத்துவதை வேறு யாராவது வந்த பார்த்தால் அந்த அணியில் யார் கேப்டன் யார் வீரர் என்ற வித்தியாசத்தை கணிக்க முடியாது.

சவுரவ் கங்குலி பிசிசிஐயின் தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு எனக்கு அவர் 2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விளையாடியது நியாபகத்திற்கு வந்தது. அந்தத் தொடரில் கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் நானும் வாசிம் ஜாஃபரும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவுட் ஆகி விட்டோம். சச்சின் டெண்டுல்கர் நான்காவது இடத்தில் இறங்க வேண்டும். ஆனால் அவரால் அப்போது களமிறங்க முடியவில்லை.

அந்தச் சமயத்தில் கங்குலி நான்காவது இடத்தில் களமிறக்கப்பட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் கங்குலி இந்தத் தொடரில் தான் இடம் பெற்று இருந்தார். இதனால் அவர் மீது அதிக நெருக்கடி இருந்தது. எனினும் அவர் அந்தப் போட்டியில் விளையாடிய விதத்தை பார்த்தப் போது நெருக்கடி நிலையை அவரால் தான் சமாளிக்க முடியும் என நான் உணர்ந்தேன். அப்போது நாங்கள் ஒரு முடிவு எடுத்தோம் வீரர்கள் யாராவது பிசிசிஐ தலைவராக வேண்டும் என்றால் தாதாவாக தான் இருக்கமுடியும் என்பது தான் அது” எனத் தெரிவித்துள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.