என்னை யாருடனும் ஒப்பிடாதீர்கள் ப்ளீஸ்; விஜய் சங்கர்
தன்னை ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வேறு எந்த வீரருடனும் ஒப்பிட வேண்டாம் என்று விஜய் சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டி, மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் தோனி, விராத் கோலி, பாண்ட்யா, புவனேஷர்குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. தமிழக இளம் ஆல்-ரவுண்டர்கள் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடத்துக்கு விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் அவரைப் போல மிக வேகப்பந்துவீச்சிலும் அதிரடி பேட்டிங்கிலும் கலக்குபவர். அதனால் இவரை சிறந்த வீரராக உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி விஜய் சங்கர் கூறும்போது, ‘ என்னை எந்த வீரருடனும் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஏதோ ஒரு விதத்தில் ஸ்பெஷல்தான். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படவே நினைக்கிறேன். இலங்கைத் தொடரில் பங்கேற்கும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பயிற்சியாளர் பாலாஜியிடம் கடந்த சில வருடங்களாக கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருப்பதால் அது எனக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது’ என்றார்.