தனக்கு பூம் பூம் என்ற செல்ல பெயர் வைத்தவர் இவர் தான்; ஷாகித் அப்ரிடி ஓபன் டாக் !!
ரசிகர்களால் பூம் பூம் அப்ரிடி என அழைக்கப்படும் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி, தனக்கு அந்த செல்ல பெயர் வைத்த இந்தியர் யார் என்பதை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆல்ரவுண்டர் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி தான். சர்வதேச ஒருநாள் போட்டியில் விரைவாக சதம் அடித்த பட்டியலில் நீண்ட நாட்கள் முதலிடத்தில் இருந்தவர் அஃப்ரிடி தான். இலங்கைக்கு எதிராக 1996ஆம் ஆண்டு, 37 பந்துகளில் அஃப்ரிடி சதம் அடித்தார். இதுவே சர்வதேச ஒருநாள் போட்டியின் விரைவு சதமாக நீண்ட வருடங்கள் இருந்தன. இதனை கடந்த 2014ஆம் ஆண்டு நியூஸிலாந்தை சேர்ந்த கோரே அண்டர்சன் 36 பந்துகளில் முறியடித்தார். பின்னர் 2015ஆம் ஆண்டு டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். இருப்பினும் அஃப்ரிடி சாதனையை முறியடிக்க 18 வருடங்கள் தேவைப்பட்டது.
அஃப்ரிடியின் அதிரடியால் அவரை கிரிக்கெட் உலகில் ‘பூம்பூம்’ என அழைப்பார்கள். இந்த பெயரை அவருக்கு யார்? வைத்தார்கள் என்பது பலருக்கு தெரியாத விடை. இந்நிலையில் ஹேஸ்டேக் அஸ்க்லாலா என்ற கேள்வி நேரத்தின் மூலம், இதற்கு விடையளித்துள்ளார் அஃப்ரிடி. பிரபலங்கள் பலரும் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் தான் அஃப்ரிடியும் (#AskLala) ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். இதில் அவரது ரசிகர் ஒருவர் உங்களுக்கு ‘பூம்பூம்’ என பெயர் வைத்தது யார் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ‘ரவி சாஸ்திரி’ என அஃப்ரிடி பதிலளித்துள்ளார்.