முரட்டுத்தனமாக பினிஷிங் செய்த தமிழ் பையன் ஷாருக் கான்.. சிக்கந்தர் ராசா தரமான பேட்டிங்… லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி!

சிக்கந்தர் ராசா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்த பிறகு, பஞ்சாப் அணிக்காக கடைசி வரை நின்று பினிஷிங் செய்து கொடுத்தார் தமிழக வீரர் ஷாருக் கான். லக்னோ அணியை வீழ்த்தி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்தது.

இதனையடுத்து லக்னோ அணிக்கு ஓபனிங் செய்த கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 53 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடி வந்த கைல் மேயர்ஸ் 29 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அதன்பிறகு ஒரு முனையில் கேஎல் ராகுல் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். ஆனால் மறுமுனையில் வந்த வீரர்கள் எவரும் நிலைத்து நிற்கவில்லை. அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 18 ரன்கள், ஸ்டாய்னிஷ் 15 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். கடைசி வரை போராடிய கேஎல் ராகுல் 56 பந்துகளில் 74 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார.  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்தது லக்னோ அணி.

160 ரன்கள் இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்கள் அதர்வா மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து மோசமான துவக்கம் கொடுத்தனர். மேத்தியு ஷாட் கடந்த போட்டியைப் போலவே இந்த போட்டியிலும் நன்றாக ஆரம்பித்தார். துரதிஷ்டவசமாக, 34 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஹர்ப்ரீத் சிங் 22 ரன்கள், ஷாம் கர்ரன் 6 ரன்கள் மற்றும் ஜித்தேஷ் சர்மா 2 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க பஞ்சாப் அணி அழுத்தத்திற்கு உள்ளானது.

களத்தில் நின்று நம்பிக்கை கொடுத்து வந்த சிக்கந்தர் ராசாவுடன் ஜோடி சேர்ந்தார் ஷாருக் கான். இருவரும் அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணிக்கு இழந்த நம்பிக்கையை மீண்டும் கொண்டு வந்தனர். மூன்று சிக்ஸர்கள் நான்கு பவுண்டரிகள் அடித்து 49 பந்துகளில் 57 ரன்கள் விளாசிய சிக்கந்தர் ராசா 18ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் ஷாருக் கான், போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றார். கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டபோது மூன்று பந்துகளில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 10 பந்துகளில் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் விளாசியது ஆட்டத்தின் திருப்புமுனையாகவே அமைந்தது.

Mohamed:

This website uses cookies.