வெட்கக்கேடான செயல்… தயவு செஞ்சு திருந்துங்கடா; அர்ஸ்தீப் சிங்கிற்கு ஆதரவாக பேசிய ஹர்பஜன் !!

முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் போட்டியில் முக்கியமான நேரத்தில் கேட்ச்சை விட்டதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் அர்ஸ்தீப் சிங்கிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி, ஹாங்காங் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொண்ட இந்திய அணி, பேட்டிங்கில் ஓரளவிற்கு சிறப்பாகவே செயல்பட்டது. ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் சொதப்பினாலும், விராட் கோலியின் பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 181 ரன்கள் குவித்தது.

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, பந்துவீச்சில் நேர் எதிராக செயல்பட்டது. ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் என அனைத்து பந்துவீச்சாளர்களும் அதிகமான ரன்களை விட்டுகொடுத்தனர். கடைசி நேரத்தில் அர்ஸ்தீப் சிங் இலகுவான கேட்ச் ஒன்றையும் தவறவிட்டார், இதனால் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் சீனியர் வீரர்கள் பலரும் சொதப்பியிருந்தாலும், அர்ஸ்தீப் சிங் கேட்ச்சை தவறவிட்டது மட்டுமே இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என பிடித்து கொண்ட ஒரு கூட்டம், அர்ஸ்தீப் சிங்கை மிக மோசமாக விமர்சித்து வருகிறது. கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரின் போது முகமது ஷமியை அவரது மதத்துடன் தொடர்புபடுத்தி விமர்சித்ததை போன்றே இந்த முறையும் அதே கூட்டம் அர்ஸ்தீப் சிங்கை மிகவும் கீழ்தரமாக விமர்சித்து வருகிறது. ஆனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அர்ஸ்தீப் சிங்கிற்கு ஆதரவாகவே உள்ளது. முன்னாள் இந்நாள் வீரர்கள் என பலரும் அர்ஸ்தீப் சிங்கிற்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங்கும், அர்ஸ்தீப் சிங்கிற்கு ஆதரவான தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “யாரும் வேண்டுமென்றே கேட்சை விடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணி பற்றி கீழ்தரமாக விமர்சிக்கும் செயல் அவமானத்திற்குறியது. அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தங்கம்” என பதிவிட்டுள்ளார்.

Mohamed:

This website uses cookies.