பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது சமி அறிவிக்கப்பட்டதற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விலகி உள்ளார். இதனால் இந்திய அணி சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. மேலும் ரிசர்வ் வரிசையில் முகமது சமி மற்றும் தீபக் சகர் இருவரும் இடம் பெற்று இருந்தனர். தீபக் சகர் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரின் போது கால் பகுதியில் காயம் ஏற்பட்டதால் ஓய்வில் இருக்கிறார். முகமது சமி கொரோனா தொற்று காரணமாக ஓய்வில் இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்து தனது உடல் தகுதியை நிரூபித்ததால் கடந்த வாரம் பும்ராவிற்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “மூத்த தேர்வுக்குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவில், பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது சமியை வருகிற ஐசிசி டி20 உலக கோப்பை அணியில் சேர்க்கிறோம். விரைவில் அவர் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி போட்டிக்காக பயிற்சியை தொடங்குவார்.” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது சமி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு பாராட்டுக்கள் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இதற்கு இரண்டும் கலந்த விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: “சமியை பும்ராவிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டது. சரியானதாக தெரிகிறது. ஆனால் முகமது சமி அறிவிக்கப்பட்டதில் என்ன விமர்சனம் நிலவுகிறது என்றால், அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு எந்தவித சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனாலும் அவரது உடல் தகுதி நன்றாக இருக்கிறது. அவர் எப்போதும் அணியில் இடம் பெறுவதற்கு தயாராக இருந்தார்.” என பதிவிட்டு இருந்தார்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் முன்னணி பந்துவீச்சாளராகவும் முகமது சமி இருந்திருக்கிறார். துவக்க ஓவர்களில் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்திருக்கிறார். பும்ராவிற்கு நேரடி மாற்று என இவரை கூற இயலாது. ஏனெனில் டெத் ஓவர்களில் சற்று சிரமப்பட்டு இருக்கிறார். இதுவும் அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.