டி20 உலக கோப்பையில் பும்ராவிற்கு மாற்று வீரராக யார் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று ராகுல் டிராவிட் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகம் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. டெத் ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பும்ரா போன்ற வீரர் திடீரென உலக கோப்பையில் இடம்பெறாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் போன்று மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கு கைதேர்ந்த வீரர் யாரும் இல்லை என சுனில் கவாஸ்கர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனாலும் தீபக் சகர் மற்றும் முகமது சமி இருவரில் ஒருவரை நிச்சயம் எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் நல்ல பார்மில் இருக்கின்றனர். ரன்களை கட்டுப்படுத்த கூடியவர்கள் என பரிந்துரைத்தார். மேலும் இந்த வரிசையில் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின்போது, பும்ராவிற்கு பதிலாக இணைந்த முகமது சிராஜ் உலகக்கோப்பை அணியில் எடுக்கப்படலாம். அவர் பும்ராவிற்கு மாற்றாக பயன்படுத்தப்படலாம் என மற்றொரு கருத்துக்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. நிலவிவரும் இந்த குழப்பங்களுக்கு ராகுல் டிராவிட் சமீபத்திய பேட்டியில் பதில் அளித்திருக்கிறார்.
“பும்ரா இல்லாதது மிகப்பெரிய இழப்புதான். நிச்சயம் இந்திய அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது. ஆனால் இந்த தருணத்தில் தான் வேறொரு வீரர் வளர்வதற்கு சரியாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மற்ற வீரர்கள் அபாரமாக செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்.” என்றார்.
மேலும், “இந்த வரிசையில் முகமது சமி முன்னணியில் இருக்கிறார். அவரது அனுபவம் இந்திய அணிக்கு பல போட்டிகளில் வென்று தந்திருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அவர் வெளியில் இருந்தார். குணமடைந்து வந்திருக்கும் அவரால் வந்தவுடன் நன்றாக செயல்பட முடியுமா? என்பது பற்றி தெரியவில்லை. அவரது மருத்துவ அறிக்கை வந்த பிறகு நான் அதை பார்க்க வேண்டும். அதன் பிறகு அவருக்கு சில பரிசோதனைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். பின்னர் தான் மாற்று வீரராக இருப்பாரா என முடிவு செய்யப்படும். அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இந்த முடிவு தெரிந்து விடும். அதற்கு இன்னும் பத்து நாட்கள் வரை இருப்பதால் எந்தவித பதிலையும் தற்போது கூற இயலாது.” என தெரிவித்தார்.