காயத்தினால் டி20 உலக கோப்பை அணியில் இருந்து விலகிய பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது சமியை அறிவித்திருக்கிறது பிசிசிஐ.
செப்டம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை க்கு செல்லும் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து மீண்டுவந்து இடம் பிடித்திருந்தார். உலக கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இடம் கொடுக்கப்பட்டு விளையாட வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடினார். அதற்கு அடுத்ததாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பு, பயிற்சி ஈடுபட்டபோது, முதுகு பகுதியில் அசைவுகரிமாகவும் வலியும் ஏற்பட்டதால் உடனடியாக இந்திய அணியின் மருத்துவ குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. காயத்தை பரிசோதித்த மருத்துவ குழுவினர், பும்ரா காயத்திலிருந்து குணமடைவதற்கு இன்னும் சில காலங்கள் ஆகும் என கால வரையறையை குறிப்பிடாமல் பிசிசிஐக்கு அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
மருத்துவ அறிக்கையின்படி, பும்ரா டி20 உலக கோப்பை அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதற்கு மாற்று வீரர் யார்? டெத் ஓவர்களை சமாளிப்பது யார்? என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. மேலும் ரிசர்வ் வரிசையில் முகமது சமி மற்றும் தீபக் சகர் இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் பும்ராவிற்கு மாற்று வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவந்து தனது உடல் தகுதியை நிரூபித்த முகமது சமி பும்ராவிற்கு மாற்று வீரராக சற்று முன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ரிசர்வ் வரிசையில் இருப்பதால் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். இவர் உடனடியாக பிரிஸ்பேனில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியுடன் இணைவார் என கூறப்படுகிறது.
மற்றொரு ரிசர்வ் வீரர் தீபச் சகர், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் போது கணுக்கால் பிசகியதால் விலகி இருக்கிறார். தற்போது ரிசர்வ் வரிசையில் முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்களும் விரைவில் ஆஸ்திரேலியா செல்கின்றனர். இந்த முடிவினை பிசிசிஐ மேல்மட்டக்குழு இன்று தீர்மானித்து அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.