உலக கோப்பை தொடரில் மூன்று முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் முகமது சமி.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பையை இந்திய அணி சிறப்பாக ஆடிவரும் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்தானது. இதனால் இதுவரை எந்தவொரு அணியிடமும் தோல்வியை தழுவாத ஒரே அணியாக திகழ்ந்து வருகிறது.
பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அவ்வப்போது சரியான துவக்கம் அமையாததால் சற்று தடுமாறி வருகிறது. அதே நேரம் நடுவரிசை பேட்டிங் இந்திய அணிக்கு சற்று கேள்விக்குறியாகவே இன்றளவும் இருந்து இருக்கிறது. ஆனால், இவற்றை சரி செய்யும் விதமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் புவனேஸ்வர்குமார் களமிறங்கினாலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதற்கு அடுத்த போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. அதனால் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது சமி களமிறக்கப்பட்டார்.இவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் எடுத்ததன் மூலம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் உலக கோப்பையில் தொடர்ந்து இரு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் முகமது சமி. இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு உமேஷ் யாதவ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
முகமது சமி 2015 ஆம் ஆண்டு ஒரு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது தொடர்ந்து இரு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் உலக கோப்பையில் மூன்று முறை 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பை உறுதி ஆகிவிடும்.
ஜூன் 30ஆம் தேதி நடக்கவிருக்கும் லீக் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.