தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் விளக்கமும், மன்னிப்பும் கோரியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாட்சனுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் ஏராளம்.
பிரபலங்களின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. அதில், ஷேன் வாட்சனும் சிக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யபப்ட்டது. ஆனால் சில மணி நேரத்தில் அது மீட்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரது இன்ஸ்டாகிரம் கணக்கில் சில ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டு இருந்தன. இதுகுறித்து ஷேன் வாட்சன் விளக்கமும் மன்னிப்பும் கோரியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த செயல்கள் குறித்து ஷேன் வாட்சன் தனது ட்விட்டர் பதிவில், “வெள்ளிக்கிழமை அன்று எனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்ட போது, ட்விட்டர் தளம் அதை மிக விரைவாக மீட்க உதவியது. ஆனால், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்க முடியவில்லை. இன்ஸ்டாகிராம் எங்கே?
எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஆபாச புகைப்படங்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இது போன்று நடக்கும் போது இன்ஸ்டாகிராம் பக்கம் மிக விரைந்து செயல்பட வேண்டும். ஆனால், நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார் ஷேன் வாட்சன்.
ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஓய்வு பெற்ற ஷேன் வாட்சன், ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதனால் அவருக்குத் தமிழகத்தில் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.