ராஞ்சியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தோனியை பற்றி கேட்டதற்கு கோபமாக பதில் அளித்து இருக்கிறார் ஷர்துல் தாக்கூர்.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிவரும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதற்கு அடுத்ததாக இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்திய ஷர்துல் தாக்கூர், இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
அப்போது டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறாதது குறித்தும், தோனியுடன் இத்தனை வருடங்கள் விளையாடிவிட்டு தற்போது ஐபிஎல் போட்டிகளில் அவருடன் விளையாட முடியாமல் போனது பற்றியும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தோனியுடன் இத்தனை ஆண்டுகள் விளையாடிவிட்டு அதன் பிறகு திடீரென அவருடன் விளையாட முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறதா? அவரை மிஸ் செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அப்போது சட்டென்று கோபம் அடைந்த ஷர்துல் தாக்கூர், என்ன கேள்வி கேட்கிறீர்கள்? அவரை எப்படி மிஸ் செய்யாமல் இருப்போம்? பதில் கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய தாக்கூர்,
“தோனியை இந்திய அணியினர் அனைவரும் மிஸ் செய்கிறோம். அவரைப் போன்ற அனுபவம் மிக்க ஒரு வீரர் எங்களது சமகாலத்தில் கிடைப்பது அரிது. 300க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகள், 90க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அசாத்திய அனுபவத்தை பெற்றிருக்கும் ஒருவருடன் சமகாலத்தில் விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அழைக்கிறது. மேலும் இனி அவருடன் விளையாட முடியாது என நினைக்கும் பொழுது சற்று வருத்தத்தையும் கொடுக்கிறது.” என்றார்.
டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறாதது குறித்து பேசிய அவர், “அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது என நினைத்தேன். ஆனால் டி20 உலக கோப்பைகள் இடம் பெறாதது குறித்து வருந்தினேன். மேலும் இதை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிற தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம்பெற முயற்சிப்பேன். உலக கோப்பையில் விளையாடுவது ஒவ்வொரு வீரருக்கும் கனவு. அது கிடைக்காமல் போனது வருத்தமாக இருந்தது.” என்றார்.