சூரத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் டெல்லி அணி ஒடிசா அணியை வீழ்த்தியிருக்கலாம், ஆனால் ஷிகர் தவண் டெல்லி அணியில் அதிக ஸ்கோரை எடுத்தவராக இருந்தாலும் ஒரு சர்வதேச வீரர் ஆடும் ஆட்டம் போல அவரது ஆட்டம் அமையவில்லை.
என்னதான் ஆயிற்று ஷிகர் தவணுக்கு? என்று கேள்வி எழுகிறது. உண்மையில் அவரது டைமிங், புதுமை புகுத்தும் ஷாட்கள், தைரியம் அனைத்தும் மாயமானது எப்படி? புதிய பறவை படத்தில் சிவாஜி கணேசன் ‘எங்கே நிம்மதி?’ என்று பாட்டில் கேட்பது போல் ஷிகர் தவண் ‘எங்கே பேட்டிங்?’ என்று கேட்டுக் கொள்ள வேண்டியதாக உள்ளது.
டி20 கிரிக்கெட்டில் 33 பந்துகளில் 60-70 ரன்கள் வெளுத்துக் கட்டும் காலக்கட்டத்தில் ஊர்பேர் தெரியாத ஒடிசா பவுலர்களின் பந்து வீச்சுக்கு எதிராக ஷிகர் தவண் 33 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இது ஒரு தடவல் இன்னிங்ஸ் என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.
சரி. பந்துகளையும் ரன்களையும் விடுவோம், ஆட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய சதங்களை எடுத்த வீரர், மற்றும் 2 உலகக்கோப்பையில் ஆடிய வீரர் என்பதன் சுவடாவது அவரது பேட்டிங்கில் தெரிய வேண்டுமே? ஊஹும்.. தெரியவில்லை, தடவு தடவென்று தடவியுள்ளார். என்றைக்குமே அவர் உத்தி ரீதியாக வலுவான வீரர் இல்லை. கை, கண் ஒருங்கிணைப்பில் நீண்ட காலம் ஓட்ட முடியாது. கை, கண் ஒருங்கிணைப்பில் சற்றே இடைவெளி ஏற்படும் போது ‘அடிப்படைக்குத் திரும்பும்’ உத்தியில் கவனம் செலுத்த வேண்டும், தவண் இப்போது அத்தகைய காலக்கட்டத்தில் இருக்கிறார்.
போராடுகிறார், பேட் ஸ்விங் இல்லை, கால்கள் நகரவில்லை. சரளமான ஆட்டத்தை அவரால் ஆட முடியவில்லை. ஒடிசா அணியின் பவுலிங்கிற்கு எதிராகவே இத்தனை திணறல், குறிப்பாக ஆஃப்பிரேக் பவுலர் ஜி.பி.பொத்தார் என்பவர் பந்துகளில் திணறினார். ஷிகர் தவன் கிரீசில் நிற்கும் போது டி20-யில் பவர் ப்ளேயில் ஒடிசாவின் அந்த பொத்தார் என்ற ஸ்பின்னர் 4 ஓவர் 18 ரன் 1 விக்கெட்! இது எப்படி?
ஷிகர் தவண் ஆட்டம் பரிதாபமாக அமைய கடைசியில் அதிகம் அறியப்படாத ஒடிசா இடது கை ஸ்பின்னர் பப்பு ராயிடம் ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினார்.
நிச்சயம் ஷிகர் தவண் உயர் ஆட்டத்திறன் கொண்ட இப்போதைய இந்திய அணியில் இடம்பெறும் தகுதியை இழந்து விட்டார். அவர் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஒன்று கிரிகெட்டிலிருந்து ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு பிறகு மனத்தை தெளிவுபடுத்திக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் மட்டையும் கையுமாக அவர் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
இந்த பேட்டிங்கை வைத்துக் கொண்டு மயங்க் அகர்வால், சஞ்சு சாம்சன், பிரிதிவி ஷா ஆகியோரைப் பின்னுக்குத்தள்ளி ஷிகர் தவணுக்கு அணி நிர்வாகம் இனியும் முன்னுரிமை அளிக்கக் கூடாது. அப்படி ஷிகர் தவணுக்கு முன்னுரிமை அளித்தால் அம்பதி ராயுடுவையும் மீண்டும் அழைத்து வாய்ப்பளிக்க வேண்டும். இதுதான் முறையாக இருக்கும். எந்த ஒரு ‘லாபி’யும் ஷிகர் தவணின் இத்தகைய சொதப்பல் பேட்டிங்கிற்கு இந்திய அணியில் இடம் கொடுத்து நியாயம் கற்பிக்க முடியாது.
என்ன ஆச்சு ஷிகர் தவணுக்கு என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அன்று கேட்டார், ஆனால் அதே கேள்வியை தற்போது ஷிகர் தவண் தன்னை நோக்கியே கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது.