வருகின்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய t20 அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பேன் என்று இங்கிலாந்து டி20 தொடரில் வாய்ப்பின்றி தவித்த ஷிகர் தவான் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி டெஸ்ட் 3-1 எனவும், ஒருநாள் 2-1 எனவும், டி20 3-2 என மூன்று தொடரையும் கைப்பற்றி இருப்பதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் முதல் டி20 போட்டியில் களமிறங்கிய ஷிகர் தவான் விரைவிலேயே தனது விக்கெட்டை இழந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் பிறகு மீதமிருந்த 4 டி20 போட்டிகளில் இருந்தும் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
கடந்த சில வரடங்களாகவே ஷிகர் தவான் டி20 போட்டிகளில் உள்ளேயும் வெளியேயும் இருந்து வருகிறார். ஒருநாள் தொடரில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் டி20 தொடரில் சொதப்பி வருவதால் அவரது டி20 தொடக்க இடம் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. இதுகுறித்து அஜித் அகர்கர் இந்தியா டி20 அணியில் நீங்கள் மீண்டும் இடம் பெற வாய்ப்பிருக்கிறதா ? என்று தவானிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தவான் “ நான் டி20 போட்டிகளில் தனது சிறப்பை கொடுக்கவே முயற்சி செய்து வருகிறேன். கண்டிப்பாக நான் இதை செய்து காட்டுவேன். எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்தி எனது திறமையை வெளிப்படுத்துவேன்.
இந்தியாவில் நடைபெறும் சையது முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை ஆகிய உள்ளூர் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறேன். இது எனக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கிறது. மேலும் வருகின்ற ஐபிஎல் தொடரில் எனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய டி20 அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பேன்” என்று ஷிகர் தவான் கூறியிருக்கிறார்.