விலா எழும்பில் அடி; அடுத்த போட்டியில் விளையாடுவாரா ஷிகர் தவான் ..?
ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் பாட் கமின்ஸ் பவுன்சரில் விலாவில் அடிவாங்கினார் ஷிகர் தவண், பீல்டிங்கின் போது ரோஹித் சர்மாவின் இடது கையில் காயமேற்பட்டது.
ஷிகர் தவண் ஆஸ்திரேலியா பேட் செய்த போது களமிறங்கவில்லை. காயம் அந்த அளவுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் பெங்களூரு ஒருநாள் போட்டியில் தவண் பங்கேற்பதில் சிக்கல் எதுவும் இல்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உலகின் நடப்பு சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பாட் கமின்ஸ் இந்த மட்டைப்பிட்ச்களிலும் அதிவேக பவுன்சர்களை வீசி வருகிறார், முதல் போட்டியில் ரிஷப் பந்த் மண்டையில் கன்கஷன் ஏற்பட இந்தப் போட்டியில் ஆடவில்லை.
தற்போது ஷிகர் தவண் அடி வாங்கி பீல்டிங்குக்கு வரவில்லை.
பாட் கமின்ஸ் என்றாலே அடி வாங்கும் வழக்கம் ஷிகர் தவணுக்கு கொஞ்ச காலமாக இருந்து வருகிறது, உலகக்கோப்பையின் போது பாட் கமின்ஸின் எழுச்சிப் பந்தில்தான் இடதுகை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தொடர்ந்து ஆட முடியாமல் போனது. அன்றைய தினத்திலும் ஷிகர் தவண் தான் 117 ரன்களுடன் அதிகபட்ச ஸ்கோரை எடுத்திருந்தார், நேற்றும் தவன் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார், ஆனால் சதத்தை தவறவிட்டார்.
இவர் அதிகபட்ச ரன்களை எடுப்பதும், பாட் கமின்ஸ் பவுன்சரில் அடிவாங்குவதும் தற்கிழமையாக நடந்து வருகிறது. இவ்வளவு பெரிய வீரர், இந்திய அணியின் பயிற்சி முறைகளில் உள்ள வசதிகள் என்ன, ஆனால் தொடர்ந்து பவுன்சரில் அடிவாங்கி காயமடைவது ஒரு நல்ல தொடக்க வீரரின் கிரிக்கெட்டுக்கு அழகானதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் ஷிகர் தவண் நிச்சயம் முன்னெச்சரிக்கை ஸ்கேனுக்காக அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிகிறது, மீண்டும் சிறு எலும்பு முறிவு என்றாலும் ஒரு நீண்ட இடைவெளி அவருக்கு ஏற்படும். ஆனால் பிசிசிஐ காய அரசியலுக்குப் பெயர் பெற்றது என்பதால் இப்போதைக்கு அவர் நன்றாக இருக்கிறார் என்று கூறியுள்ளது. ஒவ்வொரு காயத்தின் போதும் இப்படித்தான் கூறிவந்தது.
உலகக்கோப்பை பவுன்சர் காயத்திற்குப் பிறகு 2 மாதங்கள் இடைவெளி, பிறகு மீண்டும் வந்து சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் காலில் காயம்பட்டு 27 தையல்கள் மீண்டும் ஒரு மாதம் அவுட். தற்போது நல்ல பார்மில் இருக்கும் போது மீண்டும் காயம், இது அவரை பெரிதளவு பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.