இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் ரோகித் சர்மா வின் இன்னொரு முகத்தை வெளியில் கொண்டு வந்துள்ளார் ஷிகர் தவான். இதை கண்ட ரசிகர்கள் மெய்சிலிர்த்து விட்டனர்.
இந்திய அணியின் இடது கை துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்திய அணி வீரர்கள் மத்தியில் அவ்வப்போது நடக்கும் சேட்டைகளை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடந்துகொண்டிருக்கும் டி20 தொடரின் இரண்டாவது போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக ஆடி தென் ஆப்பிரிக்க அணியின் 150 ரன்கள் என்ற இலக்கை கடந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது போட்டி வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இரண்டாவது போட்டி முடிந்த பிறகு பெங்களூருக்கு விமானம் மூலம் இந்திய வீரர்கள் சென்று கொண்டிருக்கையில், தனது மகள் சமைராவிற்கு ரோகித் சர்மா செய்திருக்கும் செயலை வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷிகர் தவான். இதற்கு “இந்திய அணியில் நேசம் மற்றும் பாசம் கொண்ட தந்தைகள்” என கேப்சனும் கொடுத்திருந்தார்.
ரோஹித் சர்மா அண்மையில் தான் தந்தை ஆனார். ரோஹித்-ரித்திகா இருவருக்கும் சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது. மேலும் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜடேஜா, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தைக்கு தந்தையானார்.
இவர்கள் இருவரும் தங்களது குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிச் செல்வதை தான் வீடியோ பதிவின் மூலம் ஷிகர் தவான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.