கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எண்ணிலடங்காத சாதனைகளை செய்து வைத்திருக்கிறார். அவரது ஒட்டுமொத்த சாதனைகளை அவ்வளவு எளிதில் வேறு எந்த கிரிக்கெட் வீரர்களும் உடைத்து விட முடியாது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி படிப்படியாக நிறைய சாதனைகளை தனது பெயருக்கு பின்னால் வைத்து வருகிறார்.
விராட் கோலி தனது கிரிக்கெட் கேரியரை முடிக்கும் வேளையில் நிச்சயமாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து விடுவார் என்று பல காலமாக பேச்சுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் முதலில் விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் உடன் இணைத்து பேசுவது சரியல்ல என்று தற்பொழுது கூறியிருக்கிறார்.
சச்சின் விளையாடிய காலகட்டம் அவ்வளவு எளிதானது கிடையாது
சச்சின் டெண்டுல்கர் விளையாடிய அக்காலகட்டத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கவே மிகவும் சிரமப்படுவார்கள். அப்பொழுது விளையாடிய காலகட்டத்தில் பவுலர்கள் தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வந்து வீசுவார்கள். ஆனால் தற்பொழுது உள்ள பந்துவீச்சாளர்களில் யார் இப்படி தொடர்ச்சியாக பந்து வீசுகிறார்கள் என்ற கேள்வியையும் அக்தர் தற்பொழுது எடுத்து வைத்துள்ளார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலகட்டத்தில் 10 ஓவர்களுக்கு மேல் பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். அதேபோல அப்பொழுது டிஆர்எஸ் எனப்படுகிற விதிமுறை கிடையாது. மேலும் தற்பொழுது உள்ள வசதிகள் தற்போது சுத்தமாக கிடையாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஐசிசி பழைய விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்
விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் காலத்தில் விளையாடி இருந்தால் நிச்சயமாக இவர்கள் இருவரையும் நீங்கள் இணைத்து அல்லது ஒப்பிட்டு பேசலாம். அல்லது ஐசிசி பழையகால விதிமுறைகளை தற்போது கொண்டுவர வேண்டும். குறிப்பாக தற்பொழுது உள்ள விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. ஒரு அணியின் சராசரி ஸ்கோர் விகிதம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இவை அனைத்தும் டிஆர்பி அதிகரிக்க ஐசிசி செய்யும் செயலா என்ற கேள்வியும் எனக்கு எழுகிறது என்று சோயப் அக்தர் தற்பொழுது கூறியிருக்கிறார்.
இறுதியில் நிச்சயமாக சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலகட்டம் வேறு, அவர் விளையாடிய காலகட்டத்தில் பல சிறந்த பந்துவீச்சாளர்கள் குறிப்பாக வாசிம் அக்ரம் வக்கார் யூனிஸ் மெக்ராத் பிரட்லி ஷேன் வார்னே போன்ற பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டம் அது. எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் விராட் கோலியை சிறந்த பேட்ஸ்மேனே தவிர இவர்கள் இருவரையும் நீங்கள் இணைத்து பேசுவது சரியல்ல என்று கூறி முடித்தார்.