ஒருநாள் முழுக்க பசங்கள அடிச்ச அடி இருக்கே… பாக்ற என்னாலேயே தங்க முடியலையே அவங்க எப்படி? – சோயிப் அக்தர் கதறல்!

பாகிஸ்தான் நாட்டிற்கு 17 வருடங்கள் கழித்து டெஸ்ட் போட்டிகள் விளையாட வந்திருக்கிறது இங்கிலாந்து அணி. முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் இருவரும் சதம் அடித்து அசத்தினர். குறிப்பாக அவர்களது ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் அதிகமாக இருந்தது. 

இதைப்பிடித்துக் கொண்டு பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக பௌண்டரி சிக்ஸர்களாக அடித்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை வதம் செய்து நான்கு விக்கெட் மட்டுமே இழந்து 506 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி. இதில் நான்கு வீரர்கள் சதம் விலாசினர.  துவக்க வீரர் ஜாக் க்ராலி 122, பென் டக்கட் 107, ஆலி பாப் 108, ஹாரி ப்ரூக் 101 ஆகியோர் சதம் அடித்திருந்தனர். 

முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை முற்றிலுமாக துவம்சம் செய்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயிப் அக்தர். 

“இங்கிலாந்து துவக்க வீரர்கள் இருவரும் சதம் அடித்தது அவர்களுக்கு உந்துதலாக மாறியது. அதன்பிறகு வந்த வீரர்கள் அதை சிறப்பாக பயன்படுத்தி விளையாடினர். பயிற்சியாளர் ப்ரண்டன் மெக்கல்லம் டெஸ்ட் போட்டிகள் என்றாலும் லிமிடெட் ஓவர் போட்டிகள் என்றாலும் இரண்டிலும் மெதுவாக விளையாடுவதை முற்றிலும் விரும்பாதவர். அவரது மனநிலையை வீரர்களுக்கும் கடத்தி இருக்கிறார். அதன் காரணமாகத்தான் இப்படி அசுர வேகத்தில் டெஸ்ட் போட்டிகள் என்று பார்க்காமல் விளையாடி வருகிறார்கள்.

போட்டிக்கு முன்பு சில இங்கிலாந்து வீரர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது என்று செய்திகள் வாயிலாக கேள்விப்பட்டேன். காய்ச்சலில் இருந்தவர்கள் இப்படி 500 ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்றால், காய்ச்சல் இல்லாமல் இருந்தால் எப்படி அடித்து இருப்பார்கள்?. எங்களது வீரர்கள் இப்படி அடி வாங்குவதை என்னால் பார்க்க முடியவில்லை. முதல் நாள் மட்டுமே முடிந்திருக்கிறது. இனிவரும் நாட்களில் பாகிஸ்தான் அணி துவண்டு விடாமல் சிறப்பாக செயல்பட வேண்டும்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.