சிஎஸ்கே அணியை சிம்பிளா காலி பண்ணிட்டோம்னு சொல்லமாட்டேன்… இவங்களோட விக்கெட் தான் ரொம்ப தொல்லை கொடுத்துச்சு – ஆட்டநாயகன் ரஷித் கான் பேட்டி!

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை, இவர்கள்தான் மிகவும் தொல்லையாக இருந்தார்கள் என்று பேட்டி அளித்துள்ளார் ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷித் கான்.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த சீசனின் முதல் ஐபிஎல் போட்டியில் நடப்புச் சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணிக்கு ஓபனிங் செய்த டெவான் கான்வெ ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த மொயின் அலி சிறிது நேரம் ருத்துராஜ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். ஆனால் நட்சத்திர பவுலர் ரஷித் கான் உள்ளே வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட்டார். மொயின் அலி(23) மற்றும் பென் ஸ்டோக்ஸ்(7) இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி சிஎஸ்கே அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தி விட்டார்.

ஆனாலும் நிற்காமல் மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்தி வந்த ருத்துராஜ் 92(50) ரன்கள் விளாசினார். 20ஆவது ஓவரில் சிறப்பாக ஃபினிஷிங் செய்த தோனி 14 ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 178 ரன்களை 7 விக்கெட் இழப்பிற்கு அடித்திருந்தது.

179 இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு சகா அதிரடியாக விளையாடி 26 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். சுப்மன் கில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி 63 ரன்கள் அடித்தபோது ஆட்டம் இழந்தார்.

மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. 19ஆவது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து மீண்டும் ஆட்டத்தை குஜராத் பக்கம் திருப்பினார் ரஷித் கான். 20ஆவது ஓவரில் ராகுல் திவாட்டியா ஒரு சிக்சர் அடித்து குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது.

சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இரண்டு விக்கெட், ஒரு கேட்ச் மற்றும் பேட்டிங்கில் மூன்று பந்துகளில் 10 ரன்கள் அடித்து மிக முக்கிய பங்காற்றிய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். அப்போது அவர் பேசியதாவது:

“பலம்மிக்க சிஎஸ்கே அணிக்கு எதிராக நல்ல பங்களிப்பை கொடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றது புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. என்னுடைய முழு ஈடுபாட்டையும் பயிற்சியில் கொடுத்தேன். அதன் வெளிப்பாடாகவே போட்டியில் என்னால் மூன்று விதத்திலும் பங்களிப்பை கொடுக்க முடிகிறது.

சிஎஸ்கே அணியின் இடது கை பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு சிக்கலாக இருப்பர் என்று நினைத்தோம். அவர்களுக்கென்று திட்டங்கள் வகுத்தோம். ஆனால் அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், எனது பந்துவீச்சு லைன் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். ரன்கள் விட்டுக் கொடுக்காமல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய திட்டம் மிகவும் சிம்பிள் தான். அதுதான் முக்கிய பங்காற்றியுள்ளது.

மேலும் பேட்டிங்கில் கடைசியில் வந்து வெற்றிக்கு உதவியது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே எனது பேட்டிங்கிலும் பங்களிப்பை கொடுத்து வருகிறேன். டி20 போன்ற போட்டிகளில் அனைத்து விதத்திலும் பங்களிப்பை கொடுப்பது மிகவும் முக்கியம்.” என்று பேசினார்.

Mohamed:

This website uses cookies.