ஜெய்ஸ்வால் செம்ம பர்பார்மன்ஸ் கொடுத்தான்… ஜெய்ஸ்வால் இல்லை, ராஜஸ்தான் டீம்ல இவர் இருப்பதுக்கு தான் நாங்க ரொம்ப பெருமை படுறோம்; அவரால தான் வின் பண்ணினோம் – சஞ்சு சாம்சன் பேட்டி!

ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி கொடுத்தார். ஆனால் அணியில் இவர் இருப்பதற்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது என்று பேட்டியளித்தார் சஞ்சு சாம்சன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகள் பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இன்றைய லீக் போட்டி மிக முக்கியமானதாக இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். நித்திஷ் ரானா 22 ரன்கள் அடித்தார்.

மற்ற வீரர்கள் சொதப்பியதால் குறைவான ஸ்கோரே அடிக்க முடிந்தது. பந்துவீச்சில் கலக்கிய சகல் நான்கு விக்கெடுகளை கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இன்று கொல்கத்தாவின் சுழற்பந்து வீச்சாளர்களை ராஜஸ்தான் அணியினர் எப்படி எதிர்கொள்வார்கள்? என்ற சந்தேகம் எழுந்திருந்த நிலையில், அதை சற்றும் பொருட்படுத்தாமல் முதல் ஓவரில் இருந்தே வெளுத்து வாங்கினார் ஜெய்ஸ்வால். இவர் நித்திஷ் ரானா வீசிய முதல் ஓவரில் 26 ரன்கள் விளாசினார். அங்கேயே ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியது.

அடுத்த ஓவரில் 20 ரன்கள் என 3 ஓவர்கள் முடிவதற்குள் 13 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய வரலாறும் படைத்தார். பட்லர் டக் அவுட் ஆகி வெளியேறிய பிறகு, உள்ளே வந்த சஞ்சு சாம்சன் பக்கபாலமாக விளையாடி தனது பங்கிற்கு பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசினார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்கள், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 48 ரன்கள் அடித்தனர். ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பிறகு பேட்டி அளித்த கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில்,

“இன்று எனக்கு வேலை ரொம்ப எளிமையாக இருந்தது. ஜெய்ஸ்வால்-க்கு ஸ்ட்ரைக் கொடுத்துவிட்டு அவர் பேட்டிங்கை வேடிக்கை பார்த்தேன். அவர் பவர்பிளே ஓவர்களில் விளையாடுவது எங்களுக்கு பழகிவிட்டது. எதிரணி பவுலர்களுக்கும் தெரியும் பவர்-பிளேயில் ஜெய்ஸ்வால் எப்படி விளையாடுவார் என்று. அப்போது பேட்டிங் செய்வதை மிகவும் விரும்புகிறார்.

(சஹல் அதிக ஐபிஎல் விக்கெட்டுகள் பற்றி) யுஸ்வேந்திர சஹலுக்கு இப்போது லெஜெண்ட் பட்டம் கொடுக்க வேண்டும். அவர் ராஜஸ்தான் அணியில் இருப்பது எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.

போட்டி எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று அவருக்கு சொல்ல வேண்டியதில்லை. அவரிடம் பந்தை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்தால் போதும். மீதத்தை அவரே பார்த்துக் கொள்வார். டெத் ஓவர்களிலும் வீசுகிறார். ஒரு கேப்டனுக்கு இதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்.

எங்களுக்கு இன்னும் இரண்டு காலிறுதிப் போட்டிகள் இருக்கிறது (வெற்றி பெற்றதாக வேண்டிய லீக் போட்டியை அப்படி குறிப்பிட்டார்).  ஐபிஎல் போன்ற தொடரில் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு ஓவரும் அழுத்தம் நிறைந்ததாக இருக்கும் அனைத்தும் முக்கியம் தான்.

இன்று ஜெய்ஸ்வால்-க்காக லெஜெண்ட் ஜோஸ்பட்லர் தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்தார். அதில் இருந்தே தெரிகிறது ஜெய்ஸ்வால் எப்படி விளையாடினார் என்று. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆனால் எங்களது வேலை இத்துடன் முடியவில்லை.” என்றார்.

 

Mohamed:

This website uses cookies.