அங்க போய் அசிங்கப்படாம இப்பவே தொடர ரத்து பண்ணிடலாம்; முன்னாள் வீரர் அட்வைஸ் !!

முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக அடுத்தடுத்து விலகி வருவதால் தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை ரத்து செய்துவிடலாமா என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த சில தினங்களில் தென் ஆப்ரிக்காவிற்கு செல்லும் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது இந்திய அணிக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்பதால் இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். அதே போல் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். பிசிசிஐ., விராட் கோலியை திடீரென இந்திய அணியில் இருந்து நீக்கியதால் இந்திய அணியில் பெரும் குழப்பங்கள் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான எதிர்வரும் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக சீனியர் வீரர்கள் பலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.

சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ராகுல் சாஹர் போன்ற வீரர்கள் பலர் தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரரான ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகினார்.

ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை ரத்து செய்துவிடலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ராகுல் சாஹர், சுப்மன் கில் என பலர் தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் இல்லை, இப்போது ரோஹித் சர்மாவும் விலகியுள்ளார். என்ன நடக்கிறது என புரியவில்லை. இந்த தொடரை இப்பொழுதே ரத்து செய்துவிடலாமா..? ரோஹித் சர்மா வில்கியுள்ளது நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு தான். முக்கிய பேட்ஸ்மேன்கள் பலர் இல்லாமல் இந்த தொடரை சந்திக்க உள்ளது இந்திய அணிக்கு தான் பிரச்சனை” என்று தெரிவித்தார்.

காயம் காரணமாக விலகிய ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ப்ரியங்க் பன்ச்சல் என்னும் வீரர் தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Mohamed:

This website uses cookies.