ரஞ்சிக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியின் ஆல்ரவுண்டர் 150 ரன்கள் விளாச, அந்த அணி முதல் இன்னிங்சில் 570 ரன்கள் குவித்து மும்பை அணியை அதிர வைத்துள்ளது.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், நாக்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை, கர்நாடக அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 173 ரன்களில் சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய கர்நாடக அணி, மூன்றாம் நாளான இன்று 570 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் கோபால் 150 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் ஆல் ரவுண்டரான ஸ்ரேயாஸ் கோபால், 274 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகளுடன் இந்த இலக்கை எட்டினார். இதன்மூலம் முதல் தர போட்டியில் அவர் 4-வது சதம் அடித்துள்ளார். எம்.அகர்வால் 78 ரன்களும், கே.அப்பாஸ் 50 ரன்களும், சி.எம்.கவுதம் 79 ரன்களும், எஸ்.அரவிந்த் 51 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து 397 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ம் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்த போராடிய சூரியகுமார் யாதவ் அரை சதம் கடந்தார். அவர் 115 பந்துகளில் 55 ரன்களுடனும், ஆகாஷ் பர்கர் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. மும்பை அணி 277 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. 41 முறை ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்த போட்டியில் நாளை கடும் சவால் காத்திருக்கிறது. விக்கெட்டுகளை காப்பாற்ற கடுமையாக போராட வேண்டியிருக்கும். விரைவில் விக்கெட்டுகளை இழந்துவிட்டால், அது கர்நாடக அணிக்கு சாதகமாக திரும்பிவிடும்.