இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூன்றாவது பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயரை களமிறக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்திய அணி அதன் சொந்த மண்ணில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எந்த ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது,ஆனால் சீனியர் வீரர்கள் பலர் இந்திய அணியில் இல்லாததால் இளம் வீரர்களைக் கொண்ட இந்தியப்படை எப்படி விளையாடும் என்பதை பார்ப்பதற்கு அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
குறிப்பாக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக திகழ்ந்த அஜிங்கிய ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இரண்டு வீரர்களுக்கும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வாய்ப்பளிக்கவில்லை. இவர்கள் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தேர்வாளர்கள் குழு அறிவித்துவிட்டது.
இதன்காரணமாக தற்போதைய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யார்..? என்பது கேள்விக்குறியாக உள்ளது, பல இளம் வீரர்கள் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் விளையாடுவதற்கான வாய்ப்பு இந்திய அணியில் இருந்தாலும், தகுதியான ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி தற்போது உள்ளது.
இதன் காரணமாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய அணி எந்த வீரரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறக்கினால் வலுவாக இருக்கும் என்று தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் புஜாராவிர்க்கு பதில் 3வது இடத்தில் மாற்று வீரராக யாரை களமிறங்கினால் இந்திய அணி பலமான அணியாக திகழும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
அதில், “நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தான் புஜாராவிற்கு பதில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய தகுதியான வீரர். ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்,இவருக்கு பொறுமையாகவும் சிறப்பாகவும் விளையாடுவதற்கு நன்றாகவே தெரியும். மேலும் விக்கெட்டை இழக்காமல் ரன்களை குவிக்கவும் தெரியும் இதன் காரணமாக இவர்தான் புஜாராவிற்கு பதில் சரியான வீரர், இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பு அளியுங்கள்” என்று கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), மாயன்க் அகர்வால், பிரியன்க் பன்ச்சல், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பண்ட், கே.எஸ் பாரத், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ் (துணை கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்.