சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி., வெளியிட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, டி.20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
விண்டீஸ் அணிக்கு எதிரான டி.20 தொடரை பயன்படுத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர்கள், சர்வதேச டி.20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலிலும் முன்னேற்றத்தை சந்தித்துள்ளனர். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடிக்கிறார். முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரரும் சூர்யகுமார் யாதவ்.
விண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி.20 போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய ஸ்ரேயஸ் ஐயர் இதன் மூலம், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 6 இடங்கள் முன்னேறி 19வது இடத்தை பிடித்துள்ளார். அதே போல் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் 7 இடங்கள் முன்னேறி 59வது இடத்தை பிடித்துள்ளார்.
விண்டீஸ் அணிக்கு எதிரான டி.20 மிக சிறப்பாக பந்துவீசிய இளம் வீரரான ரவி பிஸ்னோய் 50 இடங்கள் முன்னேறி 44 இடத்தை பிடித்துள்ளார். ஆவேஸ் கான், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளனர். ஐந்தாவது டி.20 போட்டியில் விளையாடாத புவனேஷ்வர் குமார் ஒரு இடங்கள் பின்தங்கியுள்ளார்.