பந்து வீச்சாளர்களால் தோற்றோம் : ஸ்ரேயஸ்

தில்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு. அந்த அணியின் டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 72 ரன்களையும், கேப்டன் கோலி 70 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

தில்லி டேர் டெவில்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 45-வது ஆட்டம் சனிக்கிழமை இரவு புது தில்லியில் நடைபெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு பீல்டிங்கை தேர்வு செய்தது.

தில்லி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 2 ரன்களிலும், ஜேசன் ராய் 12 ரன்களிலும் சஹால் பந்துவீச்சில் போல்டானார்கள். இதனால் தொடக்கமே தில்லிக்கு தடுமாற்றமாக அமைந்தது.
பின்னர் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர்.

ரிஷப் பந்த் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விளாசி 34 ரன்களில் 61 ரன்களை எடுத்து, மொயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 32 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு தில்லி அணி 125 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் விஜய் சங்கர்-அபிஷேக் சர்மா ஆகியோர் இணை சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 19 பந்துகளில் அபிஷேக் 46 ரன்களையும், விஜய் சங்கர் 21 ரன்களையும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு தில்லி அணி 181 ரன்களை எடுத்தது. பெங்களூரு தரப்பில் சஹால் 2 விக்கெட்டையும், மொயின் அலி, சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி தரப்பில் பார்த்திவ் பட்டேல், மொயின் அலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் பட்டேல் 6 ரன்கள் எடுத்திருந்த போது லமிச்சேன் பந்தில் போல்டானார். மொயின் 1 ரன்னுடன் பெளல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அவர்களுக்கு பின் கேப்டன் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.
7-வது ஓவரின் போது 2 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 66 ரன்களை எடுத்திருந்தது.

3 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 70 ரன்களைக் குவித்த கோலி, மிஸ்ரா பந்துவீச்சில் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மந்தீப் சிங் 13 ரன்களோடு பெளல்ட் பந்தில் போல்டானார். சர்ஃபிராஸ் கான் 11 ரன்களுக்கு ஹர்ஷல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 72 ரன்களுடன் டி வில்லியர்ம், கிராண்ட்ஹோம் 3 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஒரு ஓவர் மீதமிருக்க 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்து பெங்களூரு வென்றது. தில்லி தரப்பில் பெளல்ட் 2 விக்கெட்டையும், மிஸ்ரா, ஹர்ஷல், லமிச்சேன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Editor:

This website uses cookies.