இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கிறது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய முகமது சிராஜ் இந்த இங்கிலாந்து தொடரிலும் கலக்கி இருக்கிறார். நாலாவது டெஸ்ட் போட்டியில் பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை முகமது சிராஜ் வீழ்த்தி இருக்கிறார். இதுகுறித்து சிராஜை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சிராஜ் தனது உயர்வுக்கு ராகுல் டிராவிட் தான் காரணம் என்று பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசிய சிராஜ் “ரஞ்சி கோப்பை தொடரில் நான் சிறப்பாக விளையாடியதால் என்னை ராகுல் டிராவிட் தான் இந்தியா ஏ அணிக்கு தேர்வு செய்தார். டிராவிட் என்னுடைய பவுலிங் சிறப்பாக இருக்கிறது என்று கூறுவார். மேலும் அவர் என்னுடைய பிட்னஸிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுவார். நான் தற்போது சர்வதேச இந்திய அணியில் இருக்க டிராவிட் தான் காரணம்” என்று கூறியுள்ளார் சிராஜ்.