ரஷித் கான் தவிர மற்ற குஜராத் டைட்டன்ஸ் பவுலர்களை பந்தாடிய சூரியகுமார் யாதவ் முதல் ஐபிஎல் சதம் அடித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 218 ரன்கள் குவித்தது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் ஓப்பனிங் இறங்கி அதிரடியான அணுகுமுறையை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.
பவர்-பிளே முடிந்து, 7ஆவது ஓவரின் முதல் பந்தலிலேயே ரோகித் சர்மா (18 பந்துகளில் 29 ரன்கள் அடித்து) ரஷித் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். மீண்டும் ஒருமுறை நல்ல துவக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்திக்கொள்ளாமல் தவறு செய்த இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ரன்களுக்கு அவுட் ஆனார்.
அபாரமான ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் உள்ளே வந்தவுடன் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தனது அதிரடியை துவங்கினார். மற்றொரு பக்கம் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்து அசத்திய நேஹல் வதேரா சிறப்பாக ஆரம்பித்தார். இவர் 15 ரன்கள் அடித்திருந்தபோது, ரஷித் கான் பந்தில் அவுட்டானார்.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல்முறை பேட்டிங் செய்த விஷ்ணு வினோத், யாரும் எதிர்பார்க்காத ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். 20 பந்துகளில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் தனது சிறப்பான ஃபார்மை தொடர்ந்து வந்த சூரியகுமார் யாதவ் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி நான்கு ஓவர்களில் வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் 3 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே அடித்து தாக்கம் ஏற்படுத்தாமல் ரஷித் கானிடம் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
சூரியகுமார் யாதவ், 18 ஓவர்கள் முடிவில் 73 ரன்களில் இருந்தார். கடைசி இரண்டு ஓவர்கள் மீதமிருக்க, அதில் 27 ரன்கள் சேர்த்து முதல் ஐபிஎல் சதத்தை அடிப்பாரா? என்று பலரும் எதிர்பார்த்தனர். அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக சிக்ஸர் மற்றும் பவுண்டர்களாக விளாசினார். 97 ரன்களில் இருந்த சூரியகுமார், 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தனது முதல் சதத்தை நிறைவு செய்தார்.
சூரியகுமார் யாதவ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் உட்பட 103 ரன்கள் குவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்தது.