ஜெயசூரியா அண்ட் கோ ராஜினாமா!!

ஜெயசூரியா ராஜினாமா கடிதம்

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் ஒயிட் வாஷ், அடுத்து ஒருநாள் தொடரிலும் தொடர் தோல்வி எதிரொலியால் ரசிகர்கள் மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டதையடுத்து சனத் ஜெயசூரியா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகராவுக்கு இவர்கள் கூட்டாக ராஜினாமா கடிதம் அனுப்பினர்.

இலங்கையின் தொடர் தோல்விகளுக்கு அணித்தேர்வுக்குழுவும் ஒரு காரணம் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன, முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, ‘முதுகெலும்பில்லாத தேர்வுக்குழு’ என்று சாடியதோடு இலங்கை கிரிக்கெட்டைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்று சாடியதும் நினைவுகூரத்தக்கது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்து உலகக்கோப்பையில் நேரடி தகுதி வாய்ப்பை சிக்கலுக்குள்ளாக்கிக் கொண்டுள்ள இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் 2 போட்டிகளில் வென்றால் நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றிருந்தது, ஆனால் அதுவும் தற்போது சிக்கலுக்குள்ளானதில் ரசிகர்கள் உட்பட அனைவரும் கடும் ஆத்திரமடைந்தனர், இதன் விளைவுதான் அன்று மைதானத்தில் பாட்டில்கள் பறந்தன.

இந்நிலையில் சனத் ஜெயசூரியா தலைமையிலான தேர்வுக்குழு ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளது.

 

வாய்ப்பை தவறவிட்டுள்ளது

மேலும், இங்கிலாந்தில் 2019ம் ஆண்டில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை போட்டித் தொடருக்கு (மே 30 – ஜூலை 15) நேரடியாகத் தகுதி பெற வேண்டும் என்றால், இலங்கை அணி இந்த தொடரில் 2 வெற்றியை வசப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

செப். 30ம் தேதி வெளியாகும் தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிக்கும் டாப் 7 அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து என மொத்தம் 8 அணிகள் மட்டுமே நேரடியாகத் தகுதி பெற முடியும்.

இந்த நிலையில், இந்திய அணியுடன் நடந்த முதல் 4 ஒருநாள் போட்டிகளிலும் மண்ணைக் கவ்விய இலங்கை அணி (8வது ரேங்க்) இந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி (9வது ரேங்க்) இங்கிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதால், வெற்றிகளைக் குவிக்கும் பட்சத்தில் அந்த அணி 8வது இடத்துக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் முடிவுக்காக இலங்கை காத்திருக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

அந்த தொடரில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிரதான சுற்றுக்கு முன்னேற முடியும்.

Editor:

This website uses cookies.