தோனி, சச்சினை தொடர்ந்து கங்குலியின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்கை திரைப்படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் ஆகியோரின் வாழ்க்கை ஏற்கெனவே திரைப்படங்களாக வெளியாகியுள்ளன. பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டான அந்தப் படங்களைத் தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி குறித்த படமும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மற்றொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை சினிமாவாக உருவாக்க இருக்கிறார்.
அண்மையில் “ஏ சென்சுரி இஸ் நான் எனஃப்” என்ற தலைப்பில் தன் சுயசரிதை நூலை வெளியிட்டார். கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்துள்ள இந்தப் புத்தகத்தின் அடிப்படையிலேயே திரைக்கதை அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, “இப்போதுதான் ஏக்தா கபூரின் பாலாஜி தயாரிப்பு நிறுவனத்திடம் பேசினேன். விரைவில் விவரங்களை கூறுகிறேன்” என்றார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்தான திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர் குறித்த படம் சமீபத்தில் வெளியானது, ஆனால் டாக்குமெண்ட்ரியாக வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
இதே போல் யுவராஜ் சிங் வாழ்க்கையையும் திரைப்படமாக்குவது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது, மறுபுறம் இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருவதும், இதனை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.