உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரருக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார் தாதா கங்குலி !!

உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரருக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார் தாதா கங்குலி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டினுக்கு சவுரவ் கங்குலி உதவ முன்வந்துள்ளார்.

குஜராத் மாநிலம், பரோடாவை (தற்போது வதோதரா) சேர்ந்த ஜேக்கப் மார்ட்டின் 1999 – 2001-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், இந்தியாவுக்காக மொத்தம் 10 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜேக்கப் மார்ட்டின், 138 போட்டிகளில் முதல் தர போட்டிகளில் விளையாடி 9,192 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, 2016-17 சீசனில் பரோடா அணிக்கு பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றினார்.

46 வயதான இவர், கடந்த மாதம் (டிச.28) இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.70,000 ஆகிறது.

மார்டினின் மருத்துவச் செலவு, இதுவரை ரூ. 11 லட்சத்தை தாண்டிவிட்டது. இதனால், அவரது மனைவி பணமில்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் ரூ. 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.2.70 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜேக்கப் மார்ட்டின் பற்றி தகவல் அறிந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத் தலைவருமான சவுரவ் கங்குலி, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக தெரிவித்துள்ளார்.

“நானும், மார்ட்டினும் அணியில் ஒற்றாக விளையாடியுள்ளோம். அவர் மிகவும் அமைதியான நபர் என்பது எனக்கு நினைவிருக்கிறது. மார்ட்டின் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அவரது குடும்பத்தினர் தனியாக இருப்பதாக கவலைப்பட தேவையில்லை. என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோல், ஜாகிர் கான், முனாப் பட்டேல், யூசுப் பதான், இர்பான் பதான் உள்ளிட்ட வீரர்களும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

Mohamed:

This website uses cookies.