இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் குல்தீப் நிச்சயம் விளையாடுவார்; கங்குலி நம்பிக்கை
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட் அணிகளை தங்களது மாயா ஜால சுழலால் கடந்த இரண்டு வருடங்களாக மிரட்டி வந்த இந்திய அணியின் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் வருடம் ஜூன் மாதத்திற்கு இந்திய ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
குல்தீப் யாதவ் மற்றும் சாஹலின் வருகைக்கு பிறகு இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதுவரை டெஸ்ட் போட்டியிலாவது இவர்களுக்கான ஒரு இடம் இருந்து பட்சத்தில் எதிர்காலத்தில் அதுவும் பறிக்கப்பட்டு அந்த வாய்ப்பு சாஹல் மற்றும் குல்தீப் யாதவிடம் செல்லும் என்றே தெரிகிறது. அவர்களும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அபாரமாகவே பந்து வீசி வருவதால், இந்திய அணியில் ஜடேஜா மற்றும் அஸ்வினின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கங்குலி கூறியதாவது “இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று நம்புகிறேன். ஆனால் அதற்காக அஸ்வின் அணியில் இடம்பெற மாட்டார் என்று சொல்லவில்லை, அவர் விளையாடினாலும் இல்லையென்றாலும் அணியில் இடம்பிடிப்பார், ஆனால் ஆடும் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது தென் ஆப்ரிக்கா அணியுடனான தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பிறகு ஜூலை மாதம் இங்கிலாந்து செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.