இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் தலையிடுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பிசிசிஐ., தலைவரான கங்குலி விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐ.,யின் தலைவராகவும், ஜெய்ஷா பிசிசிஐ.,யின் செயலாளராகவும் பதவியேற்றதில் இருந்தே இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு அரசியல்களும் நடைபெற்று வருகின்றன.
தோனி திடீரென புறக்கணிப்பட்டதில் துவங்கி சமீபத்தில் விராட் கோலியிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டது வரையிலும் பல அரசியல் இருப்பதாகவே பெரும்பாலான ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் கருதுகின்றனர். பிசிசிஐ., தலைவரான கங்குலி பிசிசிஐ., சம்பந்தப்பட்ட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் இந்திய அணியின் தேர்வுக்குழு உள்பட அனைத்து விசயங்களிலும் தலையிடுவதாகவும், வீரர்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாகவும் முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக சாடியிருந்தனர்.
ஏற்கனவே கங்குலி மீது பல சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் நிறைந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில், கங்குலி இந்திய அணியின் தேர்வுக்குழுவினருடன் அமர்ந்திருந்ததால், விண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வில் கங்குலி எப்படி தலையிடலாம், இது அவரது வேலை இல்லை என சமூக வலைதளங்களில் கடும் விமர்ச்சனங்கள் எழுந்தது. ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் கங்குலியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர்.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்தான தனது விளக்கத்தை கங்குலியே தற்போது வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, இதுமாதிரியான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். நான் பிசிசிஐயின் தலைவர். எனது பணி என்னவோ அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். செலக்ஷன் கமிட்டி மீட்டிங்கில் நான் கலந்துகொண்டதாக ஒரு புகைப்படம் வைரலானதை பார்த்தேன். அது செலக்ஷன் கமிட்டி மீட்டிங்கே இல்லை. அந்த புகைப்படத்தில் இருந்த ஜெயேஷ் ஜார்ஜ் செலக்ஷன் கமிட்டி உறுப்பினரே அல்ல. நான் 424 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கிறேன்(எனக்கு விஷயங்கள் நன்றாக தெரியும் என்ற தொனியில்). இதை மக்களுக்கு நினைவுபடுத்துவதில் தவறில்லை என்று கூறி சிரிப்புடன் முடித்தார் கங்குலி.