தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு; மிகப்பெரும் உதவி செய்ய முன்வந்துள்ளார் கங்குலி
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ‘இஸ்கான்’ அமைப்பிற்கு தினமும் 10,000 பேருக்கு உணவு வழங்க தேவையான நிதியை கங்குலி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அன்றாட கூலி தொழிலாளர்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி உதவி வருகிறார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ‘இஸ்கான்’ அமைப்பிற்கு தினமும் 10,000 பேருக்கு உணவு வழங்க தேவையான நிதியை அளித்துள்ளார். இதற்காக கையில் கிளவுஸ் முகத்தில் மாஸ்க் அணிந்து முழு பாதுகாப்புடன் அந்த மையத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள உணவு கூடத்தையும் அவர் பார்வையிட்டார். கங்குலி ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பேளூர் மடத்திற்கு 20,000 கிலோ அரிசியை வழங்கி இருந்தார்.
கொரோனா வைரஸ் குறித்து கங்குலி கூறியதாவது;-
வீட்டுக்கு உள்ளேயே இருங்கள். நோய் தடுப்பு சக்தியை பராமரியுங்கள். சமூக விலகல் என்பது புதிய ஒற்றுமை, புதிய நல்லிணக்கம் என்பதையும், கொரோனாவுக்கு எதிரான போரில் இது நமது தேசிய கடமை என்பதையும் உணர வேண்டும்.
உலகம் முழுவதும் இது கடினமான காலகட்டம். இந்தியாவிலும் , பல்வேறு மாநிலங்களிலும் நாம் நிமிர்ந்து நின்று அதை எதிர்கொள்வோம். பிரதமர், முதல்-மந்திரிகள், சுகாதாரத்துறையினர் முயற்சி செய்கிறார்கள். போலீசார் சிறப்பாக பணியை செய்கிறார்கள்.
ஆனால் நாம் தனிமையைத் தான் பராமரிக்க வேண்டும். உத்தரவுகளை மதித்து பாதுகாப்பாக இருப்போம். நாம் ஒன்றிணைந்து பொறுப்பாக இருந்தால் இதில் வெல்லலாம்.
கொரொனா ஒரு அபாயகரமான வைரஸ். இதுவரை உலகம் இப்படி ஒன்றை பார்த்ததில்லை. உலகம் இனி இப்படி ஒன்றை காணாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது.
இது தனித்துவமான விதிவிலக்கான காலகட்டமாகும். ஆகவே பொறுப்பாக இருப்போம். வீட்டுக்குள்ளேயே இருந்து ஆரோக்கியத்தை காப்போம்” என்றார்.