சௌரவ் கங்குலி முன்னாள் இந்திய வீரர் ஆக இருந்தவர். பல சாதனைகள் படைத்து விட்டு தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கிறார். கடந்த 10 மாதங்களாக தான் அவர் பதவியில் இருக்கிறார். கங்குலி பதவியேற்றது முதல் எந்த ஒரு தொடரும் சரியாக நடந்து விடவில்லை. அவர்மேல் குற்றம் இல்லை என்றாலும் பிற காரணங்கள் இதனை செய்து வருகின்றன.
வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் கேள்விக்குறியாகியுள்ளது. நடக்கவிருந்த தென்னாப்பிரிக்க தொடரும் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக நியூசிலாந்து சென்ற இந்திய அணி படு மோசமாக அனைத்து தொடரிலும் தோல்வி அடைந்தது. இப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது. மேலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் வீரர்கள் பலர் சேர்ந்து முன்னாள் இந்திய வீரர்கள் சங்கம் என்று ஒன்றை ஆரம்பித்தனர்.
இந்த சங்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை அந்த சங்கத்திற்கு தேவையான வசதிகளையும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என அந்த சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி அசோக் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
அதாவது 25இற்கும் குறைவான முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களுக்கு ஒரு சில சலுகைகள் அளிக்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ காப்பீடு 10 லட்சம் ரூபாயும் மாதாந்திர பென்ஷன் தொகையாக ஒரு தொகையும் கொடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் இதனை கொடுக்கவில்லை என அசோக் மல்கோத்ரா தெரிவித்துள்ளார் தற்போது பிசிசிஐ நிதி சுமையில் இருந்து வருகிறது. இந்த வருட ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் 4,000 கோடி இழப்பு ஏற்படும். இந்த நிலைமையில் மேலும் ஒரு பிரச்சினையை கங்குலியின் முன் வைத்திருக்கிறார்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்.