ஆப்கானிஸ்தானுடன் மோதல்: இன்றாவது முதல் வெற்றியை பெறுமா தென்னாப்பிரிக்கா?

உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில், ஆப்கானிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன.

உலகக் கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. ஒரு போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டியில், தென்னாப்பிரிக்காவும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, முதல் வெற்றிக் கணக்கைப் பதிவு செய்ய, இரு அணிகளும் தீவிர முயற்சியில் உள்ளன. இந்த இரு அணிகளும் ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் சந்திப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தது. பாப் டுபிளிசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி ஒரு புள்ளியை பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க அணியில் டி காக், அம்லா, டுபிளிசிஸ், டேவிட் மில்லர், டுமினி, வாண்டர் டூசென் என சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டுபிளிசிஸ் மட்டுமே நின்று ஆடுகிறார். அதே போல வேகபந்துவீச்சில், ஸ்டெயின் இல்லாத குறை தெரிகிறது. ரபாடா மட்டுமே துல்லியமாக வீசி விக்கெட் வீத்துகிறார். அவருக்கு சரியான துணை இல்லாததால் பந்துவீச்சும் தடுமாறி வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், முகமது நபி ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் இதுவரை நடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் தென்னாப்பிரிக்க அணிக்கு கடும் சவால் கொடுப்பார்கள். இதை ஆப்கானிஸ்தான் கேப்டன், நைப்பும் தெரிவித்துள்ளார். ‘’ஆடுகளத்தில் பந்து நன்றாகத் திரும்பினால் ரஷித்தும் நபியும் தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்பார்கள்’’ என்றார்.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால், தென்னாப்பிரிக்க அணியின் அரை இறுதி வாய்ப்பு அவ்வளவுதான் என்பதால், இன்றைய போட்டி அந்த அணிக்கு முக்கியமான ஒன்று. இதனால் முதல் வெற்றியை பெற இரண்டு அணிகளும் கடுமையாக போராடும்.

ஆப்கானிஸ்தானும் இதுவரைவெற்றி கணக்கை தொடங்கவில்லை. ஆஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் குறைந்த ரன்களில் (207, 152, 172) ஆட்டமிழந்து தோல்விகளை சந்தித்துள்ளது ஆப்கானிஸ்தான். பந்து வீச்சில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய அந்த அணி பேட்டிங்கில் தடுமாறி வருவது தொடர்கதையாக உள்ளது.

இதற்கிடையே இன்றைய ஆட்டம்மழையால் பாதிக்கப்படக்கூடும்என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.