தென் ஆப்ரிக்காவை வீழ்த்த இதை செய்யுங்கள்; இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் முக்கிய அட்வைஸ்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற, முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஒரு ஆலோசனை கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது.
செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. அந்த போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை(ஜனவரி 3) தொடங்குகிறது. இந்நிலையில், அந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஜெயிக்க வேண்டுமென்றால், அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களான ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்ஹுட் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். ஆண்டர்சன் – பிராட் ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மிகவும் கடினமான அந்த முடிவை எடுக்கப்படும். கண்டிஷனை பொறுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்த முடிவை எடுக்க அணி நிர்வாகம் தயங்காது என்று சில்வர்ஹுட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து ஸ்பின்னர் ஜாக் லீச் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற்றிருப்பதால், அடுத்த போட்டியில் அவர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.