சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், புஷ்-அப் எடுக்கும் காட்சிகளை வெளியிட்டு, அனைவரும் உடற்பயிற்சி செய்து உறுதியாக இருக்கவேண்டுமென்று வலியுறுத்தியதோடு விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஃபிட்னஸ் சவால் விடுத்திருந்தார்.
அதன் பின்னர் கோலி, பிரதமர் மோடி, உள்ளிட்ட பலர் தங்களது ஃபிட்னஸ் விடியோவை வெளியிட்டு, அனைவரும் உடற்பயிற்சி செய்யுமாறு கூறியிருந்தனர்.
இந்த ஃபிட்னஸ் சவால் நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வு பரப்பியதோடு, பிரபலங்கள் மட்டுமின்றி இளைஞர்களும் பொதுமக்கள் பலரும் தங்கள் நண்பர்களுக்கு ஃபிட்னஸ் சவால் விடுத்தனர்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தற்போது புதிதாக, ‘கிட்-அப்’ சவால் விடுத்துள்ளார்.
மனதுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள் என்று கூறியுள்ள சச்சின், தனக்கு பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டுக்காக வேகமாக கிட்களை அணியும் விடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கிட்-அப் சவாலை விட்டுள்ளார்.
இந்த சவாலில் இந்திய கேப்டன் விராட் கோலி, மிதாலி ராஜ், பிவி சிந்து, இந்திய கால்பந்து வீரர் சந்தேஷ், இந்திய ஹாக்கி கேப்டன் சர்தார் சிங், டென்னிஸ் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரையும் டேக் செய்துள்ளார்.