இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான அதிக முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இலங்கையின் கொழும்பில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியால் ஐந்து அறிமுக வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இஷான் கிஷன், க்ரூணல் பாண்டியா, சாஹல், குல்தீப் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சாஹர், நவ்தீப் சைனி மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1980ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு பிறகு இன்றைய போட்டியில் தான் இந்திய அணி ஐந்து அறிமுக வீரர்களுடன் களமிறங்கியுள்ளது.
அதே போல் இன்றைய போட்டிக்கான இலங்கை அணியும் மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. பிரவீன், அகிலா தனன்ஞனயா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;
ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணா, ஹர்திக் பாண்டியா, க்ருஷ்னப்பா கவுதம், ராகுல் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சக்காரியா.
கடைசி ஒருநாள் போட்டிக்கான்ன இலங்கை அணி;
அவிக்ஷா பெர்னாண்டோ, மினோட் பனுகா (விக்கெட் கீப்பர்), பனுகா ராஜபக்சே, டி சில்வா, சாரித்ஹ் அஸ்லான்கா, தாசுன் ஷனாகா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணாரத்னே, அகிலா தனன்ஞனயா, துஸ்மன்ந்தா சம்மீரா, பிரவீன் ஜெயவிக்ரமா.