டிரினிடாட் டெஸ்ட் – இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3
போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் கிரெய்க் பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய பாவெல் 38 ரன்களும், ஷாய் ஹோப் 44 ரன்களும், ரோஸ்டன் செஸ் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து இறங்கிய விக்கெட் கீப்பர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. ஷேன் டாவ்ரிச் 46 ரன்களுடனும், தேவேந்திர பிஷு ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஷேன் டாவ்ரிச் பொறுப்பாக சதமடித்து அசத்தினார். அவரை தவிர மற்றவர்கள் நிலைக்கவில்லை.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்துள்ளது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
Lahiru Kumara of Sri Lanka rexeives the ball on day 2 of the 1st Test between West Indies and Sri Lanka at Queen’s Park Oval, Port of Spain, Trinidad, on June 7, 2018. / AFP PHOTO / Randy Brooks
இதைத்தொடர்ந்து, இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் குசால் மெண்டிஸ், குசால் பெராரா விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய மேத்யூசும் 11 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமர் ரோச், காப்ரியல், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.