வங்காள தேசத்தை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை

வங்காள தேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதனடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை அணி முதல் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. அதேவேளையில் வங்காள தேசம் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் வங்காள தேசம் – இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற இயலும் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி களம் இறங்கியது.

டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தமிம் இக்பால், அனாமுல் ஹக்யூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

3-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அனாமுமல் ஹக்யூ க்ளீன் போல்டானார். அடுத்து ஷாகிப் அல் ஹசன் களம் இறங்கினார். இவர் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்த சில நிமிடங்களில் தமீம் இக்பால் 5 ரன்கள் எடுத்த நிலையில் லக்மல் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் வங்காள தேசம் 4.5 ஓவரில் 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. இதில் இருந்து வங்காள தேச அணியால் மீண்டு வர இயலவில்லை. முஷ்பிகுர் ரஹிம் (28), சபிர் ரஹ்மான் (10) மட்டுமே இரட்டை இழக்க ரன்களை தொட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காள தேசம் 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 82 ரன்னில் சுருண்டது.

இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் 3 விக்கெட்டும், சமீரா, பெரேரா, சண்டகன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை 11.5 ஓவிரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குணதிலகா 35 ரன்களும், தரங்கா 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 விக்கெட் வீழ்த்திய லக்மல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

நாளைமறுநாள் (27-ந்தேதி- இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் வங்காள தேசம் – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Editor:

This website uses cookies.